சிவபக்தரான செல்வராகவன் கல்லூரி பேராசிரியர், கல்லூரி மாணவிகள் விடுதியின் காப்பாளர் மற்றும் விடுதி காவலர் ஆகியோரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்கிறார். மறுபக்கம் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் தற்போதைய யூ டியூபருமான நட்டி நட்ராஜ், தனது அண்ணன் மகளின் தற்கொலை குறித்து விசாரிக்க முனைய, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அதை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபடும் நட்டி, இதுபோல் பல இளம்பெண்கள் மர்மமான முறையில் இறந்திருப்பதையும், இதற்கு பின்னணியில் பெரிய மனிதர்கள் இருப்பதையும் கண்டு பிடிக்கிறார்.
தகுந்த ஆதாரங்களுடன் குற்றவாளிகளின் முகத்திரையை கிழிக்க முடிவு செய்யும் நட்டி, அதற்கான முயற்சியில் ஈடுபடும் போது, செல்வராகவனும் இப்படி ஒரு பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்கிறார். அதற்காக செல்வராகவனை சந்திக்க முயற்சிக்க, அவர் செல்வராகவனை சந்தித்தாரா? இவர்களது பிரச்சினையின் பின்னணியில் இருக்கும் அந்த மர்மம் என்ன? என்பதே இந்த ‘பகாசூரன்.’
கதையின் நாயகன் பீம ராஜாக நடித்திருக்கும் செல்வராகவன், பாதிக்கப்பட்ட பரிதாபமிக்க மனிதர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அந்த ஆழ்கடல் அமைதி பார்வை ஆயிரம் விஷயம் சொல்லி விடுகிறது. ஆக்ரோஷமிக்க சிவபக்தராக அவரது இன்னொரு கோணமும் சிறப்பானது. பள்ளி ஆசிரியரை கொல்லும் முதல் காட்சியிலேயே அந்த வெறித்தமான கொலைக்கோபம் அவரது பிளாஷ்பேக்கை எதிர்பார்க்க வைத்து விடுவது திரைக்கதை பலம். மகளுக்கும் அவருக்குமான அந்த அன்பு, தந்தையிடம் காட்டும் அன்யோன்யம் என நடிப்பின் வீரியம் கூடிக்கொண்டே போகிறது. மகளுக்கு நேர்ந்த விபரீதம் தெரிந்ததும் ஆத்திரத்தில் தந்தையை உலுக்கும் இடத்தில் நடிப்பில் பீமபலம்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வரும் நட்டி நட்ராஜின் கதாபாத்திரத்தை, மர்மங்களை கண்டுபிடிக்கும் விசாரணை அதிகாரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அவரது கதாபாத்திரத்தை சம கால யூடியூபராகவும் சித்தரித்தரிப்பது கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. நட்டி நட்ராஜும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

செல்வராகனின் மகளாக நடித்திருக்கும் தாராக்‌ஷி அன்பென்றால் அன்பு. அப்படியொரு அன்பு மகளாக திரைப்பிரவேசம் செய்திருக்கிறார். தந்தை மற்றும் தாத்தாவின் அன்பில் அவர் கரைந்துருகும் கிராமத்து வெள்ளந்தி மனுஷியாக கண்ணில் நிற்கிறார். அந்த தாத்தா கேரக்டரில் கே.ராஜன் கச்சிதம். வில்லனாக ராதாரவி, புரோக்கராக கூல் சுரேஷ் கேரக்டர்களில் நிற்கிறார்கள்.

ஒரு பாடலுக்கு வரும் மன்சூரலிகான், வாட்ச்மேன் ராம்ஸ், அருணோதயன், குட்டி கோபி, போலீஸ் தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன், குணாநிதி வந்த கொஞ்ச நேரத்திலும் அளவான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்கள். விடுதி தலைவியாக சசி லயா, செல்வராகவனை வெறுப்பேற்றும் காட்சிகளில் நடிப்பில் பிரகாசிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஃபருக் ஜே பாட்ஷாவின் கேமராவும், சாம் சி.எஸ்.சின் இசையும் அடடா, அழகு ரகம். இதற்கு மேல் என்ன சொல்வது என்னப்பனே…

அடுத்தது இது தான் நடக்கும் என்று பார்வையாளனுக்கு தெரிந்தாலும் அதை காட்சிக்குள் நிறுத்தும் இடங்களில் இயக்குனர் மோகன்.ஜி., ‘ஓ.கே.ஜி’

‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களில் சாதீயம் பேசியவர், இம்முறை பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியிருக்கிறார், அளவாக, அழகாக.
ஸ்மார்ட்போன், இண்டர்நெட் ஆகியவை மாணவர்களின் அழிவிலும் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை போட்டுடைத்்த திரைக்கதை நல்லதோர் எச்சரிக்கை மணி. அதோடு பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் படம் பேசுகிறது.

அடுத்தடுத்த கொலைகள் கொடுரமாக நிகழ்ந்தும் காவல்துறை அதை ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளாதிருப்பது மட்டும் இது சினிமா என்பதை நினைவூட்டுகிறது. என்றாலும் எடுத்துக் கொண்ட கதைக்கருவுக்காக கொண்டாடலாம், இந்த பகாசூரனை.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/6f6c5857-7620-4b5d-bd78-fd12abcd062f-819x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/6f6c5857-7620-4b5d-bd78-fd12abcd062f-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்சிவபக்தரான செல்வராகவன் கல்லூரி பேராசிரியர், கல்லூரி மாணவிகள் விடுதியின் காப்பாளர் மற்றும் விடுதி காவலர் ஆகியோரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்கிறார். மறுபக்கம் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் தற்போதைய யூ டியூபருமான நட்டி நட்ராஜ், தனது அண்ணன் மகளின் தற்கொலை குறித்து விசாரிக்க முனைய, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அதை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபடும் நட்டி, இதுபோல் பல இளம்பெண்கள் மர்மமான முறையில் இறந்திருப்பதையும்,...