திரை விமர்சனம்

பைண்டர் திரை விமர்சனம்

குற்றவியல் துறையில் பட்டம் பெறும் நாயகன் வினோத் ராஜேந்திரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘ஃபைண்டர்’ என்ற துப்பறியும் நிறுவனத்தை தொடங்குகிறார். அந்நிறுவனம் மூலம், குற்றம் செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார்.
அப்போது அவரிடம், கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியாக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சார்லியின் வழக்கு வருகிறது. குற்றமற்ற சார்லியை காப்பாற்ற களத்தில் இறங்கும் நாயகனின் பரபரப்பான துப்பறியும் பயணம் தான் இந்த ‘ஃபைண்டர்’.


குடும்பத்தின் வறுமைச் சூழலால் பணத்துக்கு ஆசைப்பட்டு, செய்யாத கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டு சிறைக்குச் செல்கிறார் பீட்டர். ஆறு மாதத்தில் அவரை சிறையிலிருந்து மீட்டுவிடுவோம் என உறுதியளித்தவர்கள் ஒரு கட்டத்தில் அவரை மீட்க முடியாது என கை கழுவி விட, எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் ஏமாற்றத்தை சந்திக்கிறது அவரது குடும்பம். இதனால் பீட்டரின் மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள, அனாதையாகிறாள், பீட்டரின் ஒரே மகள்.

இந்த வழக்கில் பீட்டர் சிக்கியது எப்படி? உண்மையில் கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்றெல்லாம் ஆராயும் முயற்சியில் நாயகன் இறங்க, கிடைக்கிற தகவல்கள் எல்லாம் அதிர்ச்சிமேல் அதிர்ச்சிமயம். இதைத்தாண்டி பீட்டரை வினோத்தால் சிறையிலிருந்து விடுவிக்க முடிந்ததா இல்லையா? என்பதே திகுதிகு திரைக்கதை.

பீட்டராக சார்லி. அப்பாவி குடும்பத் தலைவனாக, சூழ்நிலைக் ‘கைதி’யாக துரோகம் தரும் வலியை கடதூதுகிற கச்சித நடிப்பில் கவனம் பதிகிறார்.

இயக்குனர் வினோத் ராஜேந்திரன் நடிகராகவும் சிறப்பு. பிரைவேட் டிடெக்டிவாக குற்றப் பின்னணியை கண்டறிவதில் அலட்டலில்லாத அந்த நடிப்பு, அடடா, ஆச்சரிய ரகம். அவருக்கு உதவியாளராய் இணைந்து பயணிக்கிற அழகான தாரணி அளவான நடிப்பில் மனம் நிறைகிறார்.

அரசுத்தரப்பு வழக்கறிஞராக நிழல்கள் கம்பீரம் காட்ட, நட்புக்கு இன்னொரு கலங்கரை விளக்கமாகவே வந்து வாய்த்திருக்கிறார், சென்ராயன்.

சார்லியின் மகளாக பிரணா, வில்லனாக நாசர்அன்வர்ராஜா உள்பட நடித்தவர்கள் அத்தனைபேரும் பாத்திரம் அறிந்த பிச்சை.

சூர்ய பிரசாத்தின் பின்னணி இசையும் பிரசாந்த் வெள்ளிங்கிரியின் ஒளிப்பதிவும் காட்சிகளை நம்இதயம்வரை கொண்டு சேர்க்கிற வித்தையை செய்திருக்கிறது.

ஒரு கதை தரும் உணர்வை இதயம் வரை கடத்தும் அற்புத இயக்கம் வினோத் ராஜேந்திரனுடையது. இனி தமிழ்த்திரையில் இவர் தவிர்க்கமுடியாத இடத்தில் இருப்பார்.

பைண்டர், இனிய ஆச்சரியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *