ரத்னம் விமர்சனம்.. 3.75/5… விஷால் ஆக்ஷன்
தாமிரபரணி & பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் விஷால் இயக்குனர் ஹரி இணைந்திருக்கும் படம் ‘ரத்னம்’.
இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சமுத்திரக்கனி யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
சுகுமார் ஒளிப்பதிவு செய்ய டி எஸ் ஜெய் எடிட்டிங் செய்ய பாடல்களை விவேகா எழுதியுள்ளார்.
தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சண்டை பணிகளை கனல் கண்ணன் மேற்கொண்டுள்ளார்.
கார்த்திகேயன் சந்தானம் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் ரத்னம் படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.
1994 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது.. தமிழக ஆந்திர எல்லை பகுதிகளில் கொள்ளையர்கள் திருப்பதி செல்லும் பேருந்துகளை விபத்துக்குள்ளாக்கி பயணிகளின் நகைகளை உடைமைகளை பறிக்கின்றனர். இதனை விசாரிக்கும் காவல் அதிகாரிகளையும் அவர்கள் கொலை செய்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கத்தில் தமிழகத்தில் வேலூர் பகுதியில் ஒரு பெரிய ரவுடி கும்பலிடம் இருந்து சமுத்திரகனி உயிரைக் காப்பாற்றுகிறார் சிறு வயது விஷால்.
இந்த இரண்டு கதைகளும் 2024 ஆம் ஆண்டுக்கு அதாவது 30 ஆண்டுகளுக்குப் பிறகு நகர்கிறது.
எம்எல்ஏவாக வளர்ந்து நிற்கும் சமுத்திரக்கனிக்கு வலது கை இடது கை எல்லாமுமாக இருக்கிறார் விஷால்.
இந்த சூழ்நிலையில் நீட் தேர்வு எழுத காத்திருக்கும் பிரியா பவானி சங்கரை பார்க்கிறார்.. பார்த்த நாள் முதல் ஏதோ ஒரு பாசம் ப்ரீயா மீது விஷாலுக்கு ஏற்படவே அவருக்காக ஓடி ஓடி நிற்கிறார்.
பிரியாவை கொல்ல திட்டமிட்டு துடிக்கிறது ஒரு ஆந்திரா கும்பல்.. அவர்களிடமிருந்து விஷால் காப்பாற்ற போராடுகிறார்.
பிரியாவுக்காக விஷால் ஓடி நிற்பதன் நோக்கம் என்ன? அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற கதைகளுக்கும் இந்த கதைகளுக்கும் என்ன என்ன சம்பந்தம்? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.
ஆக்சன் என்றால் விஷாலுக்கு அல்வா சாப்பிடுவது தான்.. இதில் ஹரியுடன் இணைந்து இருப்பதால் அவரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து பட்டைய கிளப்பியிருக்கிறார்.
விஷாலின் ஆக்ஷனுக்கு தீனி போடுவது போல் பைட் மாஸ்டர் கனல் கண்ணனும் இணைந்து விட்டதால் அனல் பறக்க தீப்பொறி பறக்கிறது. பல காட்சிகளில் ரத்தம் தெறிக்க தெறிக்க அருவாளை வீசி இருக்கிறார்..
காமெடி செய்து கொண்டிருந்த யோகி பாபுவையும் கொஞ்சம் அதட்டல் மிரட்டல் ஆக அடிதடி செய்ய விட்டிருக்கிறார் இயக்குனர் ஹரி.
ஹரி படங்களுக்கே உரித்தான நாயகி போல பிரியா பவானி சங்கர்.. இரண்டு விதமான தோற்றங்களில் அருமையான அழகான உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார் பிரியா.
ரத்னம் ட்ரைலரைப் பார்த்தபோது விஷாலுக்கு வில்லனாக சமுத்திரக்கனி இருப்பார் என நினைத்து விட்டோம்.. ஆனால் இதில் இருவரும் இணைந்து மெகா வில்லன்களுக்கே வில்லங்கம் செய்திருக்கின்றனர்.
ஆந்திராவை அலறவிடும் வில்லன்களாக முரளி சர்மா, ஹரிஷ் பராடி, முத்துக்குமார் உள்ளிட்டோரும் உண்டு. அதிலும் முக்கியமாக இவரின் இன்ட்ரோ காட்சி பயங்கர பில்டப்.. ஒரே ஒரு காட்சியில் வந்து ஆங்கிலத்தையும் தமிழையும் படபட பேசி செல்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.
ஆந்திர அமைச்சராக கஜராஜ் அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்
இவர்களுடன் ஜெயப்பிரகாஷ் ஒய் ஜி மகேந்திரன் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல அபிமான நட்சத்திரங்களும் இணைந்து இருக்கின்றனர்.
பளிச்சிடும் வசனம்…
“மக்களில் 60% அயோக்கியர்கள் இருக்க, 40% தான் நல்லவர்கள் இருக்க, இந்த 60% இருந்து 40% மக்களை காப்பதே என் வேலை…”
டோன்டரி பாடலுக்கு முறையான ஆட்டம் போடும் தாளத்தை கொடுத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.. பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் தெறிக்க விட்டிருக்கிறார்… முக்கியமாக 20 நிமிடம் ஓடக்கூடிய ஆக்ஷன் காட்சியை இவரது இசை தூக்கி நிறுத்தி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கைவண்ணத்தில் நம்முடன் கேமராவும் இணைந்து படபடக்க வைக்கிறது.
ஹரி-க்கு எப்போதும் வழக்கமான ஒரு கூட்டு குடும்பம் டெம்ப்ளேட் கதை இருக்கும்.. ஆனால் இதில் அதை மாற்றி தமிழக ஆந்திரா எல்லைப் பகுதிகள் கதையை கொண்டு கொஞ்சம் வித்தியாசமாக விருந்து படைத்திருக்கிறார்.
ஆனால் இரண்டு மூன்று பாகங்களாக சொல்ல வேண்டிய கதையை ஒரே பாகமாக கொடுத்து கொஞ்சம் நீளத்தை கொட்டி இருக்கிறார்…
வழிப்பறிக் கொள்ளையர்கள்.. நீட் தேர்வு.. அம்மா மகன் பாசம்… அடியாள் விசுவாசம் என அனைத்தையும் கலந்து ரசிகர்களுக்கு கோடை விருந்து அளித்திருக்கிறார்கள் விஷால் மற்றும் ஹரி கூட்டணி