திரை விமர்சனம்

ஒரு நொடி விமர்சனம். மதிப்பெண் .. 3.75/5.

இதுதான் ‘ஒரு நொடி’ கதை என முடிவு செய்த இயக்குனர் மணிவர்மன்.. கதையை வேறு எங்கும் திசை திருப்பாமல் படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கதையை தொடங்கி இருப்பது சிறப்பு..

தன் கணவர் எம்எஸ் பாஸ்கரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி.. தனக்கு வேலராமமூர்த்தி மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

இதனை அடுத்து இந்த வழக்கை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் தமன்குமார்.

எம் எஸ் பாஸ்கர் சம்பந்தப்பட்ட நண்பர்களிடம் விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் திடீரென ஒரு பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.. அவர் தீபாவின் மகள்.

இரண்டு வழக்கையும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.. எப்படி விசாரித்தாலும் எங்கும் துப்பு துலக்க முடியாத படி விசாரணை நீண்டு கொண்டே போகிறது.

இந்த சூழ்நிலையில் அவர் என்ன செய்தார்? இரண்டு வழக்குகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ன செய்தார் இன்ஸ்பெக்டர்?

எம் எஸ் பாஸ்கர் என்ன ஆனார்? ஸ்ரீரஞ்சனி என்ன செய்தார்? இந்தப் படத்தின் ‘ஒரு நொடி’ என்ற தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை அழகாக சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.

தமன்குமார், நிகிதா, எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, தீபாஷங்கர், ஸ்ரீரஞ்சனி, குரு சூரியா உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஸ்மார்ட்டான முகம். கம்பீரமான தோற்றம் என தமிழ் சினிமா ஹீரோவுக்கு உரித்தான அத்தனை அம்சங்களுடன் காணப்படுகிறார் தமன்குமார்.. இப்படி இருந்தும் இவருக்கு ஏன் வாய்ப்புகள் இதுவரை இல்லை என்ற கேள்வி எழுகிறது..

போலீஸ் வேடத்திற்கும் நாயகன் வேடத்திற்கும் இவரது குரல் கம்பீரமாக பொருந்துகிறது.. இவர் செய்யும் விசாரணையில் அடடா இவர் குற்றவாளியை கண்டுபிடித்து விடுவார் என்ற நம்பிக்கையையும் பிறக்கிறது..

முறுக்கிக் கொண்டு மிரட்டி கொண்டிருந்த வேல. ராமமூர்த்தி கிளைமாக்ஸ்சில் என்ன ஆனார் என்பதற்கான விளக்கம் இல்லை..

அதுபோல நான் அரசியல்வாதி.. நான் நினைத்தால் உன்னை காலி செய்து விடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்த பழ கருப்பையா அதன் பிறகு என்ன செய்தார் என்பதற்கு காட்சிகள் ஒன்றுமே இல்லை..

கணவரை தொலைத்து விட்டு காவல் நிலையத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் ஸ்ரீரஞ்சனி நடிப்பு நிறைவான நடிப்பு..

தனக்கு கொடுக்கப்பட்ட காட்சி மிகக் குறைவு என்றாலும் படம் முழுவதும் நிறைந்திருக்கும் வகையில் நடிப்பு கொடுத்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.

இவரது நண்பராக வரும் கஜராஜன் நடிப்பு கச்சிதம்..

நாயகி நிகிதா கொஞ்சம் என்றாலும் மன நிறைவான காட்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்.. படத்தில் ஆண்களை மட்டுமே காட்டிக் கொண்டிருந்த வேலையில் இவரது தோற்றமும் இவரது நடிப்பும் மனதிற்கு இதம் அளிக்கிறது..

நிகிதாவின் அப்பா நடிப்பு அளவோடு என்றால் அம்மா தீபாவின் நடிப்பு ஓவர்..

முடி திருத்தும் கலைஞராக வரும் விக்னேஷ் ஆதித்யா.. எதிர்பாராத திருப்புமுனை..

கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சஞ்சய் மாணிக்கம் இசை அமைத்துள்ளார்.. கொல்லாதே என்ற பாடலை ஜெகன் கவிராஜ் எழுதியிருக்கிறார்.. இவரது வரிகள் கவனம் பெறுகிறது.

சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.. ரித்தீஷின் ஒளிப்பதிவு கதை உணர்வுடன் கூடிய உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறது..

நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு நிமிடம் நிச்சயம் பெரிய திருப்புமுனையை உண்டாக்கும்.. அது நல்லதாகவோ கெட்டதாகவோ அமையலாம் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறது.

அதே சமயம் தமன்குமார் மட்டுமே பெரிய அதிகாரியாக காட்டப்படுகிறார். இது போன்ற வழக்கு விசாரணைகளில் நிச்சயம் உயர் அதிகாரியின் அழுத்தம் இருந்திருக்கும்.. அதுபோன்ற காட்சிகள் எதுவும் இல்லை.. இது போன்ற ஆங்காங்கே கொஞ்சம் லாஜிக் மீறலை தவிர்த்து இருக்கலாம்..

கொலையாளி அவராக இருக்குமோ? இவராக இருக்குமோ? என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் நாம் யூகிக்கும் போது இவர்கள் யாருமே இல்லை என கதையை நகர்த்தி இருப்பது இயக்குனர் மணிவர்மனின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது

மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தனஞ்செயன் வழங்குகிறார். ஏப்ரல் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.