ஒரே கல்லூரியில் படிக்கும் மணிகண்டன்-சிந்து காதலர்கள். காதல் நெருக்கத்தில் அபர்ணா தாஸ் கர்ப்பமடைய, விஷயம் அறிந்து இரண்டு குடும்பமுமே கைவிட்ட நிலையில், கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு குறைந்த சம்பளத்தில் கிடைத்த வேலையில் தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாக இவர்களது வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட, அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி முட்டல் மோதல்…ஒருநாள் வேதனைக்கு வடிகாலாக மணிகண்டன் அலுவலகத்தில் இருந்துவரும் போது ‘தண்ணி’ போட்டு விட்டு வர… வீட்டு நிலவரமே கலவரம் ஆகி விடுகிறது
மறுநாள் கோபத்தில் மணிகண்டன் அலுவலகம் போக…அன்று இரவு பிரசவ வலி ஏற்பட்ட சிந்து கணவனுக்கு போன் போட… மனைவி மீதான கோபத்தில் அவன் எடுக்காமல் போக… விஷயம் தெரிந்து சிந்துவின் பெற்றோர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துப் போக…

இரவில் வீட்டுக்கு வரும் மணிகண்டன் விஷயம் அறிந்து பதறியடித்து மருத்துவமனை போகிறான். அங்கே அவன் சந்தித்தது மனைவியை அல்ல. அவர்களின் சொத்தாக கிடைத்த ஆண் குழந்தையை மட்டுமே. குழந்தையுடன் மனைவி வீட்டுக்குப் போனால் அவர்கள் காலி செய்து விட்டுப் போனதாக கிடைத்த தகவல் அதிரச்சி தருகிறது.
கைக்குழந்தையுடன் தனிமையில் போராடும் மணிகண்டன், அந்த குழந்தையை வளர்ப்பதோடு, நல்ல வேலையிலும் சேர்கிறான். அங்கே அவன் மேலதிகாரியாக அவன் மனைவி சிந்துவை பார்த்து அதிர்கிறான்.
ஆனாலும் இருவருமே கணவன்-மனைவி என்று காட்டிக் கொள்ளாமல் பணியை தொடர்கிறார்கள். இந்நிலையில் ஒருநாள் நாலு வயது மகனை மணிகண்டன் அலுவலகம் அழைத்து வர, அதேநேரம் அந்த குழந்தை தான் தன் மகன் என்பது சிந்துவுக்கு தெரிய வர…
அதுவரை குழந்தை இறந்து விட்டது என்று பெற்றோரால் நம்ப வைக்கப்பட்டிருந்த சிந்து அப்புறமாய் எடுக்கும் முடிவு, பரவச கிளைமாக்ஸ்.
மணிகண்டனாக கவின். சிந்துவாக அபர்ணா தாஸ். நடிப்பில் இருவருமே பொருத்தமான ஜோடியாக பிரகாசிக்கிறார்கள். ரசிகர்களின் பல்சுக்கு ஏற்றபடி கதை தேர்வு செய்வதில் கவினின் தேர்ந்த அக்கறை தெரிகிறது. காதலன், பொறுப்பற்ற கணவன், நல்ல அப்பா என மூன்று வேடங்களிலும் இயல்பான முக பாவனைகளில் ஆச்சரியப்படுத்துகிறார். தனக்கு எந்தவொரு சோகத்திலும் அழுகையே வராது என்று ஆரம்பக் காட்சியில் காதலியிடம் கூறுபவர், கிளைமாக்சில் தன்னையும் அறியாமல் கண்ணீர் சொரியும் காட்சியில் அந்த காட்சியும் நடிப்பும் சிகரம்.
நாயகனுக்கு இணையான வேடத்தில் வரும் அழகான அபர்ணா தாஸ் நடிப்பிலும் அழகு. பெரும்பாலான காட்சிகளில் கண்களிலேயே கோபத்தை காட்டுவது இன்னமும் அழகு. அறிமுக நாயகிக்கு இப்படியான கேரக்டர்கள் முதல் படத்திலேயே அமையாது. அதிலும் தன் எதிரே நிற்பவன் தன் மகன் என்பது தெரிந்ததும் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிமயம் சொல்லிக் கொடுத்தெல்லாம் வராது.
கவினின் நண்பராக நடித்திருக்கும் பிரதீப் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
வி.டி.வி.கணேஷின் அறிமுகமும் கவினின் நண்பரான பிறகு அவரது நகைச்சுவை பங்களிப்பும் படத்தின் இன்னொரு கிச்சுக்கிச்சு மேளா.
பாக்யராஜ், ஐஸ்வர்யா, ஹரிஷ், கமல், பவுசி மற்றும் குழந்தை நட்சத்திரம் இலன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்கள்.
எழிலரசனின் ஒளிப்பதிவும் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினின் இசையும் படத்தின் இன்னபிற பலம். பொருத்தமான இடததில் வரும் ‘நம்மால எல்லாரும் நல்லாயிருக்கணும். அதே நேரம் நம்மளை விட நல்லா இருந்துடக்கூடாது’ வசனத்துக்கு அரங்கு அதிர கை தட்டுகிறார்கள். கதை இப்படித்தான் நகரும் என்று தெரிந்தாலும் அதை காட்சிப்படுத்திய விதத்தில் அறிமுக இயக்குனர் கணேஷ்கே.பாபு, தமிழ்த்திரையின் நம்பிக்கை நல்வரவு. பொக்கே கொடுத்து கொண்டாடுவோம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/dada.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/dada-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்ஒரே கல்லூரியில் படிக்கும் மணிகண்டன்-சிந்து காதலர்கள். காதல் நெருக்கத்தில் அபர்ணா தாஸ் கர்ப்பமடைய, விஷயம் அறிந்து இரண்டு குடும்பமுமே கைவிட்ட நிலையில், கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு குறைந்த சம்பளத்தில் கிடைத்த வேலையில் தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாக இவர்களது வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட, அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி முட்டல் மோதல்...ஒருநாள் வேதனைக்கு வடிகாலாக மணிகண்டன் அலுவலகத்தில் இருந்துவரும் போது ‘தண்ணி’ போட்டு விட்டு வர......