தன் அம்மாவை நம்ப வைத்து ஏமாற்றிச் சென்ற தந்தையை, காத்திருந்து பழி வாங்கும் மகனின் கதையே ‘மைக்கேல்’.
மும்பையில் பிரபல தாதாவாக கோலோச்சும் கெளதம்மேனனை எதிர்பாராத சமயத்தில் ஒருவர் கொல்ல முயல, மின்னல் வேகத்தில் நாயகன் சந்தீப் கிஷன் காப்பாற்றுகிறார். இதனால் கெளதம்மேனனின் நம்பிக்கைக்கு உரியவராகும் சந்தீப் கிஷனுக்கு பல பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. அதில் முக்கியமானது, கெளதமை கொல்ல முயற்சித்தவனையும், அவனது மகளையும் கொல்ல வேண்டிய பணி. இதற்காக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கு தன்னால் கொல்லப்பட இருக்கும் பெண்ணைப் பார்த்ததும் காதலாகிறார். இதனால் வந்த வேலை பெண்டிங் ஆகிறது.

இதனால் சந்தீப் கிஷனையும் அவன் காதலித்த பெண்ணையும், பெண்ணின் தந்தையையும் அடியாட்கள் வைத்து தூக்குகிறார், கௌதம்மேனனின் மகன். சந்தீப்பை துப்பாக்கியால் சுட்டு, தண்ணீரில் தூக்கி எறிகிறார்கள். துப்பாக்கியால் சுடப்பட்ட சந்தீப் என்னவானார்? நாயகியை காப்பாற்ற மீண்டு(ம்) வந்தாரா? மும்பைக்கு சந்தீப் வந்த காரணம் இறுதியில் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக் கதை.

90’களின் காலகட்டத்தில் கதை நடப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
ஆக்‌ஷன், ரொமான்ஸ் என இரண்டுக்கும் ஏற்ற ஹீரோவாக சந்தீப் கிஷன். குறைவான வசனங்கள், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி என கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்

ஹீரோயின் திவ்யான்ஷா பாடலில் அறிமுகமாகி பின்பு, வழக்கமான கேங்ஸ்டர் பட ஹீரோயினாக மாறி விடுகிறார்.
தாதாவாக கௌதம் மேனன் ஆகச்சிறந்த தேர்வு.
கெளரவ வேடத்தில் வரும் விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் தங்கள் குறைந்த பட்ச பங்களிப்பிலும் கூட தங்கள் கேரக்டர்களுக்கு பட்டை தீட்டி பளபளக்க வைத்து விடுகிறார்கள்
கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டல்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.சின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் மிகப்பெரிய பலம் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்தில் காதலை பிழிய பிழிய சொன்ன ரஞ்சித் ஜெயக்கொடி இந்த படத்தில் அதிரடியை துவைத்து தொங்க விட்டு ஆக்–ஷன் பிரியர்களை உற்சாகமாக்கி இருக்கிறார்.