சிறகன் திரை விமர்சனம்

அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட. அந்த கொலை வழக்கை காவல் துறை விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அதே பகுதியில் மகனை தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கும் எம்.எல்.ஏ ஜீவா ரவியும் அவருடன் இருந்த ஜூனியர் வழக்கறிஞர் சானுவும் அடுத்தடுத்து கொலையாகிறார்கள்.
இருவரின் கொலை வழக்கு தொடர்பாக பிரபல வழக்கறிஞர் கஜராஜ் மீது காவல்துறைக்கு சந்தேகம் வர, சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஜிடி.யின் விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரிய வர…
இந்த கொலை வழக்குகளின் பின்னணி என்ன?, எதற்காக இந்த கொலைகள்? கொலையாளி யார்? எதிர்பார்த்திராத திருப்பங்களோடு விடை தருகிறான், ‘சிறகன்’.
சுயநினைவின்றி கோமாவில் இருக்கும் தனது மகளின் நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் வழக்கறிஞர் கேரக்டரில் கஜராஜ் கச்சிதம். அதை அவர் நிதானமாக கையாள்வதில் தான் காட்சியில் ஜீவனும் நடிப்பில் இயல்பும் இருக்கிறது.
தொடர் கொலைகள் ஒரு பக்கம், இறந்த தங்கையின் நினைவு மறுபக்கம் என்று கவலை சுமக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வினோத் ஜிடி, எம்.எல்.ஏவாக ஜீவா ரவி, ஆனந்த் நாக், கஜராஜின் மகளாக பெளசி ஹிதாயா, கர்ஷிதா ராம், பள்ளி மாணவராக பாலாஜி, எம்.எல்.ஏவின் உதவியாளராக பூவேந்தன் என நடித்தவர்கள் தங்கள் பாத்திரங்களோடு மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
க்ரைம் திரில்லர் படத்திற்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் சேட்டை சிக்கந்தரின் கேமரா உலா வர, . ராம் கணேஷ்.கே இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இன்னொரு லெவலாக படத்தை தாங்கி பிடிக்கிறது.
பெண் கொலை, எம்.எல்.ஏ.வின் மகன் மாயம், எம்.எல்.ஏ. கொலை, கஜராஜ் மகளின் பாதிப்பு, பள்ளி மாணவர்களின் அபாய செயல் என்று படத்தில் ஏகப்பட்ட கிளைக் கதைகள் இருப்பினும், அவற்றை ஒரு மையப்புள்ளியில் நேர்த்தியாக கோர்த்ததில் வெங்கடேஷ்வராஜ் படத்தொகுப்பாளராகவும் இயக்குனராகவும் கவனம் பதிகிறார்.
இந்த சிறகன், வெற்றிச் சிறகன்.
