விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு ,ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் , சங்கீதா கிருஷ், சம்யுக்தா சண்முகநாதன், நந்தினி ராய் ,கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமன், வி டிவி கணேஷ், பரத் ரெட்டி,சஞ்சனா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வம்சி பைடிபள்ளி இயக்கி உள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜு சிரிஷ் தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவு கார்த்திக் பழனி,இசை எஸ். தமன், எடிட்டர் பிரவீன் கே எல், சண்டைக்காட்சிகள் ராம் லக்ஷ்மன், பீட்டர் ஹெயின், திலீப் சுப்பராயன்.

சரத்குமார் மாபெரும் தொழிலதிபராகத் தனது வியாபார உலகில் கொடி கட்டிப் பறக்கிறார்.அவருக்கு மூன்று மகன்கள். மூத்தவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், அடுத்தவர் ஷாம், கடைக்குட்டி மகன் விஜய்.
முதல் இரண்டு பிள்ளைகளும் அப்பா சொல் தட்டாதவர்கள்.அதனால் தந்தையின் வியாபாரத்திற்குத் துணை நிற்கிறார்கள்.

கடைசிப் பிள்ளை விஜய் சுதந்திரமான சிந்தனை உள்ளவர்.தன் முடிவைத்தானே எடுப்பவர்.தன் அண்ணன்களைப் போல் மந்த புத்தியில் இயங்காது, சொந்த புத்தியில் இயங்குபவர். எனவே பணத்தையே எப்போதும் துரத்தும் தன் தந்தையின் கொள்கையில் கருத்து மாறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

சரத்குமாரின் மனைவி ஜெயசுதா.பாசமுள்ள தாயாக தவிப்புகளையும் சொந்த நிராசைகளையும் மனதிற்குள் அழுத்திக் கொண்டு இருப்பவர்.ஆயிரம் வசதிகள் இருந்தாலும் இளைய மகன் விஜய் வீட்டை விட்டுத் தனியே வெளியே சென்ற வருத்தத்தில் இருக்கிறார்.

சரத்குமாருக்குத் தொழில் போட்டியாளரான பிரகாஷ்ராஜ், எப்படியாவது சரத்குமாரின் வணிக சாம்ராஜ்யத்தைச் சரித்து விட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.அதற்கான குழிபறிக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வீட்டை விட்டு பிரிந்து வெளியே சென்ற விஜய்,சில ஆண்டுகளுக்குப் பின் வீட்டிற்கு வர வேண்டிய சூழல் நேர்கிறது.

அப்போது தனது தந்தைக்கு இருக்கும் தொழில் சிக்கல்களையும் குடும்ப பிரச்சினைகளையும் மெல்ல மெல்ல தீர்த்து வைத்து எப்படிப் பழைய நிலையை மீட்டெடுக்கிறார் ? தனது தந்தையின் தொழில் வாரிசாகத் தன்னை எப்படித் தகுதிப்படுத்திக் கொள்கிறார் என்பதுதான் ‘வாரிசு’ படத்தின் மீதிக் கதை.

பணக்காரக் குடும்பம் அதற்கேற்ற வாரிசு தேடுதல் என்பது ஒரு பழைய சினிமா சூத்திரமாக இருந்தாலும் கூட்டுக் குடும்பம் அதில் உள்ள ஏற்ற இறக்கங்கள் அப்பா அம்மா அண்ணன் அண்ணி குழந்தைகள் என்று சென்டிமெண்ட் கலவையாக மாற்றித் தொழில் குடும்பம் இவற்றில் எப்படி பிரதான கதாநாயகனான விஜயின் கதாபாத்திரம் இயங்குகிறது என்பதைக் காட்சிகள் ஆக்கி ஒரு முழு நீள குடும்பச் சித்திரமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் வம்சி.

அதிரடி ஆக்சன் என்று முழு நீள கமர்சியல் ஹீரோவாக இருந்து வந்த விஜய் இதில் தனது ஆஸ்தான ரசிகர்கள் தாண்டி குடும்பத்தினரின் கவனத்தையும் கவரும்படியான ஒரு கதையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நடித்துள்ளார்.

எப்போதும் பிரபல கதாநாயகனின் படங்களில் அவர்தான் வெல்ல முடியாதவராக இருப்பார். கடைசியில் அவர்தான் ஜெயிப்பார் என்பது மரபாக இருக்கிறது. அதே பாணி தான் இதிலும் தொடர்கிறது.
,இருந்தாலும் உடன் பயணிக்கும் பாத்திரங்கள் துணைப் பாத்திரங்கள் அனைத்திற்கும் கதையில் பங்கேற்பதற்கு நல்ல இடங்களை அளித்துள்ளார் இயக்குநர். அவர்களுக்கு என்று தனித்தனியே மனச்சிக்கல்களையும் உள்ளுக்குள் நிகழும் போராட்டங்களையும் பிரச்சினைகளையும் என்று சித்தரித்து அனைத்தையும் தொடர்பு படுத்தி முழுமையான கலகலப்பான சுவாரசியமான படமாக ஆக்கி இருக்கிறார் இயக்குநர்.

சுரங்கங்கள் ஏலம் எடுப்பது தொடர்பான பிரச்சினையில் சரத்குமாருக்கும் பிரகாஷ்ராஜுக்கும் பெரிய போட்டி நடக்கிறது.விஜய் குடும்பத்தில் நுழைந்த பிறகு சரத்குமாரின் கை ஓங்க முடியாத அளவிற்கு அனைத்து வாசல்களையும் அடைத்து வைக்கும் பிரகாஷ்ராஜ் செய்யும் தந்திரங்களை எப்படி விஜய் முறியடிக்கிறார் என்பது திருப்புமுனை.

எஸ் ஜே சூர்யா சர்ப்ரைஸான கதாபாத்திரத்தில் வருகிறார்.ஆனால் அவரது நடிப்பு ரசிக்கும் படி இருந்தாலும்,அவரது கதாபாத்திரச் சித்தரிப்பில் நம்பகத்தன்மை குறைந்துள்ளது.

அப்பாவுக்குக் தெரியாமல் 400 கோடி ரூபாய் ஒரு மகன் கடன் வாங்குவது நம்பும்படியாகவில்லை. மூத்த மகனுடன் அப்பாவுக்குத் தெரியாமல் இப்படி ஒரு பெண் தொடர்பு இருப்பதும் நம்ப முடியாத ஒன்றுதான். கதையில் இப்படிச் சின்ன சின்ன ஓட்டைகள் உண்டு.

எத்தனைக் கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தாலும் ஒன் மேன் ஆர்மியாக எல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்துப் பல வகை நடிப்பிலும் கலந்து கட்டிப்புகுந்து விளையாடிப் படத்தை தாங்கிப் பிடிக்கிறார் விஜய்.

சுதந்திரப் பறவையாக வெளியே சுற்றித் திரிவது,அவ்வப்போது தத்துவங்கள் பேசுவது, குடும்பத்திற்குள் ஒவ்வொரு பாத்திரத்தையும் மூளைச்சலவை செய்வது, யோகி பாபுவுடன் நக்கல் நையாண்டி என்று சிரிக்க வைப்பது , ராஷ்மிகாவுடன் ஆட்டம் பாட்டம் என்று ஜாலியாக இருப்பது,சண்டை என்று வந்துவிட்டால் அதிரடியாக மோதி ஜெயிப்பது என எல்லா வகைகளிலும் விஜய் தனக்கான இடத்தை நிரப்பிக் கொள்கிறார்.

ஒரு தொழிலதிபராக எவ்வளவு வசதிகள் இருந்தாலும் மன அழுத்தத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அந்தக் கதாபாத்திரத்தில் சரத்குமாரும் ,குடும்பம் ஒன்றே தனது எல்லாமுமாக நினைக்கும் அவர் மனைவியான ஜெயசுதாவும் தங்களது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட் வில்லனாக பிரகாஷ்ராஜ் பச்சைச் சிரிப்பு சிரித்துக் கொண்டே உள்ளடி வேலைகள் செய்பவராக வழக்கம் போல வந்து போகிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி கேன்வாஸ் பிரமாண்டமாகத் தெரியும் வகையில் கலை இயக்கமும் ஒளிப்பதிவும் கைகோர்த்து நாம் விழிகளை விரியவைக்கின்றன. ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி சண்டைக் காட்சிகளில் கூடுதலாகத் தனது திறமையைக் காட்டி உள்ளார்.

எஸ்.தமனின் இசையில் பாடல்கள் இனிமை.பின்னணி இசையிலும் அவர் குறை வைக்கவில்லை.
பாடல் காட்சிகளுக்கு விஜய் நடனமாடுவதற்கு ஏற்ற மாதிரியான இடத்தைப் பாடல்களில் கொடுத்துள்ளார். பீட்டர் ஹெயின் ,திலீப் சூப்பராயன் இருவரும் இணைந்து அமைத்துள்ள சண்டைக் காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட உணர்வைத் தரும்.

மொத்தத்தில் விஜயின் பயணத்தில் கதையம்சமுள்ள ஒரு படமாக வாரிசு திகழ்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.படத்தில் ஒரு துளியும் ஆபாசமின்றி முழுப் படத்தையும் முடித்துள்ளது பெரிய ஆறுதல்.

சின்னச் சின்ன குறைகளைப் புறந்தள்ளிவிட்டு குடும்பத்துடன் படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/01/549df642-425f-463c-94f3-5203338de694-1024x762.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/01/549df642-425f-463c-94f3-5203338de694-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு ,ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் , சங்கீதா கிருஷ், சம்யுக்தா சண்முகநாதன், நந்தினி ராய் ,கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமன், வி டிவி கணேஷ், பரத் ரெட்டி,சஞ்சனா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வம்சி பைடிபள்ளி இயக்கி உள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜு சிரிஷ் தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவு கார்த்திக் பழனி,இசை எஸ். தமன், எடிட்டர் பிரவீன் கே...