அஜித்குமார், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கேன், ஜி எம் சுந்தர் , பக்ஸ் , பிரேம், பட்டிமன்றம் மோகனசுந்தரம், வீரா ,தர்ஷன், மகாநதி சங்கர், பவானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹெச். வினோத் இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு நீரவ்ஷா, இசை ஜிப்ரான், எடிட்டர் விஜய் வேலுக்குட்டி, ஸ்டண்ட் சுப்ரீம் சுந்தர், நடனம் கல்யாண்,கலை இயக்கம் மிலன், தயாரிப்பு போனி கபூர்.

அஜித் குமார் என்ற ஒற்றைக் கதாநாயகனை நம்பி முழுக்கதையையும் உருவாக்கி முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான படமாக ஹெச்.வினோத் உருவாக்கி உள்ள படம் தான் ‘துணிவு’.

வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட கதையாக முழுப் படத்தையும் வடிவமைத்து, அதன் பின்னே ஒரு சமூக விழிப்புணர்வுக் கருத்தையும் வாழைப்பழத்திற்குள் ஊசி போல் செலுத்தியுள்ளார் இயக்குநர்.முதல் பாதியில் வங்கியில் நடக்கும் கொள்ளைகளைத் துல்லியமாகக் காட்சிகள் ஆக்கி இருப்பவர், இரண்டாவது பாதியில் வங்கிகள் மக்களிடம் அடிக்கும் கொள்ளையைப் பற்றிக் காட்சிகளை வைத்து விழிப்புணர்வுக் கருத்துகளை விதைத்துள்ளார்.

இப்படத்தின் கதை என்ன? ஒரு வங்கிக்குள் கொள்ளையடிக்க ஒரு கும்பல் வருகிறது .அதே வங்கியில் அஜித் நுழைகிறார். அவர் எதற்காக உள்ளே வந்திருக்கிறார் என்றால் அவரும் அங்கே கொள்ளை அடிக்கத்தான் என்கிறார்.
முதல் கொள்ளைக் கும்பல் குழம்புகிறது. இவர்களுக்குள் வங்கி நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் புகுந்து விளையாடி, அவர்கள் இதில் எப்படிப் பங்கெடுக்கிறார்கள் அவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? என்பதை மர்மமான முடிச்சுகள் போட்டு இறுதியில் அவிழ்த்துள்ளார் இயக்குநர்.

படத்தின் பெரும் பகுதி வங்கியின் உள்பகுதியில் நடப்பது போலவே கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் எதிர்மறை நிழல் விழும் அஜித்தின் கதாபாத்திரம் ,கதை நகர நகர பாசிட்டிவ் பிம்பமாக மாறுகிறது .அதன் பின்னணியில் உள்ள காட்சிகள் என்னென்ன ?என்பது சுவாரஸ்யமான திருப்பங்கள்.

படத்தில் அஜித் பாத்திரத்துக்குப் பெயரே இல்லை எனலாம்.அதை யோசிக்க வைக்கவே இல்லை. ஆனாலும் அலட்டிக் கொள்ளாமல் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உள்ளார். நக்கல் சிரிப்பும் நையாண்டி பேச்சும் என்று அந்த கதாபாத்திரத்தில் அதகளம் செய்கிறார். அலட்சியத்தைத் தனது பேச்சால் உடல் மொழியால் வெளிப்படுத்தி உள்ளார்.
படம் முழுக்க வெள்ளைத் தலை முடி ,வெள்ளைத் தாடி என்று வருகிறார். தோற்றத்தில் மட்டுமல்ல எனது ஒவ்வொரு அசைவிலும் அந்த அலட்சியத்தை அனாயாசமாகக் காட்டி ரசிகர்களைக் கவர்கிறார்.

பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம், இப்படத்தில் யாரும் எதிர்பாராத வகையில் மை பா என்கிறதொலைக்காட்சி பத்திரிகையாளராக வருகிறார். தொலைக்காட்சி உலகத்தில் நிகழும் தொழில் போட்டிகளைத் தனது நக்கல் வசனங்களால் அவர் மக்களுக்கு அம்பலப்படுத்துகிறார்.

சமுத்திரக்கனி நேர்மையும் விரைப்பும் மிக்க காவல்துறை ஆணையாளராக வருகிறார். ஜி எம் சுந்தர் அந்த யுவர் வங்கியின் மேலாளராக வருகிறார். இவர்களைத் தாண்டி வங்கி நிறுவனத் தலைவராக ஜான் கொக்கேன் நடித்துள்ளார். அஜித்தின் செயல் திட்டங்கள் அனைத்திலும் இணையாகத் துணை நிற்கும் கண்மணி கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

அது மட்டுமல்ல பால சரவணன், மகாநதி சங்கர் என்று சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வருபவர்கள் கூட மனதில் பதிகிறார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு சுவாரசியமான காட்சிகள் உள்ளன.

துப்பாக்கி, குண்டுவெடிப்பு, ஃபயரிங் என்று பரபரப்பாக காட்சிகள் உள்ளன. பரபரப்பான ஆக்சன் பட நடுவில் ஒரு சமூகக் கருத்தை வைத்து மக்களுக்கு பாடம் நடத்தி உள்ளார் இயக்குநர் வினோத்.

சதுரங்க வேட்டையில் பிறரை ஏமாற்றுவதை ஒரு திறமையாக தந்திரமாக கலையாக நியாயப்படுத்திய இயக்குநர் வினோத், துணிவில் ஏமாற்றங்கள் மூலம் வரும் இழப்புகள் அது தரும் வலிகள் , துயரங்கள் பற்றி விளக்கியுள்ளார்.

பரபர ஆக்ஷன் திரில்லராகப் படம் இருந்தாலும் ஆங்காங்கே யோசிக்க வைக்கும் சின்ன சின்ன பொறி வசனங்கள் உண்டு.

நாம் அன்றாடம் நமது தொலைபேசியில் நம்மை மீறி வரும் கடன் வேண்டுமா? ம்யூச்சுவல் ஃபண்ட் , கடன் அட்டைகள் வேண்டுமா? போன்ற விளம்பரங்களின் பின்னணியில் ஒளிந்துள்ள ரகசிய வலைவிரிப்புகள் பற்றி படத்தில் காட்சிகள் அமைத்து உள்ளது சிறப்பு.

நீரவ்ஷா படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பிரம்மாண்டத்தையும் ஆக்சன் காட்சிகளையும் அழகாகத் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் கதைக்களமாக இருந்தாலும் அந்தக் குறை தெரியாத அளவிற்கு அவர் தனது ஒளிப்பதிவில் நிறைவு செய்துள்ளார். உண்மையா கற்பனையா என்று நம்ப முடியாத அளவிற்கு அரங்க அமைப்புகள் உள்ளன.கலை இயக்க வடிவமைப்பாளர் மிலன். பரபரப்பான சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் அமைத்துள்ளார். சற்றும் கண் சிமிட்ட முடியாத அளவிற்கு தொய்வில்லாத படத்தொகுப்பை படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி அமைத்துள்ளார்.

இந்தப் படத்திற்குப் பாடல்களை தேவையில்லை. ஆனால் இரண்டு பாடல்கள் வருகின்றன அவை வேகத்தடைகளாக உள்ளன.பின்னணி இசையில் ஜிப்ரான் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

மொத்தத்தில் துணிவு அஜித் ரசிகர்களுக்கான பொங்கல் விருந்து. கமகமக்கும் ஆக்சன் மசாலா.