பார்த்த பெண்களையெல்லாம் நொட்டை சொல்லி கழித்து வந்த சிவகுமாருக்கு ஒருவழியாக முதலில் பார்த்த பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிறது. மாலை பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்துக்கு சென்னையில் இருந்து கிளம்ப ரெடியாகும் சிவகுமாரை அழைத்த அவரது மேலாளர் முக்கியமான வேலை ஒன்றை கொடுக்கிறார். அந்த வேலையை செய்யாவிட்டால் தனது வேலை பறிபோகும் அபாயத்தை உணர்ந்த சிவகுமார், அந்த வேலையை முடிக்க களத்தில் இறங்குகிறார். அதற்காக இளம்பெண் பாடினி குமாரை சந்திப்பதோடு, அவரால் பிரச்சனையிலும் சிக்கிக்கொள்கிறார். பிரச்சினையில் இருந்து விடுபட இருவரும்பாண்டிச்சேரிக்கு பயணப்பட, கூடவே பிரச்சனையும் அவர்களுடன் பயணமாகிறது. முடிவில் பிரச்சினையில் இருந்து சிவகுமாரும், பாடினி குமாரும் மீண்டார்களா? சிவகுமாரின் நிச்சயதார்த்தம் நடந்ததா? என்பதை கலகல காமெடியோடு சொல்லியிருக்கிறார்கள்.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிவகுமார், அறிமுக நடிகர் என்றாலும் அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குழப்பமான மனைநிலையை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பதிலும் தேறி விடுகிறார்.

நாயகியாக வரும் பாடினி குமார் படம் முழுவதும் உற்சாகமாக இருக்கிறார்.

 

வில்லன், அடியாள் கதாப்பாத்திரங்களில் மிரட்டி வந்த ராம்ஸ், முதல் முறையாக காமெடி வேடத்தில் கலக்கியிருக்கிறார்.

 

மைக்கேல் குரூஸ், ராக்கி ஆகிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும், ஜான் விஜய், காயத்ரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் தங்கள் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஈஸ்வரன் தங்கவேல் தனது கேமராவால் பயணக் கதைக்குள் நம்மையும் இணைத்துக் கொள்கிறார்.இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் இசை இதம்.

பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சினையை கதைக்களமாக்கிய இயக்குனர் ஷிவானி செந்தில், அதை கலகல பின்னணியில் சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது.

நாயகிக்கு முக்கியமான வில்லன் யார் என்ற அந்த திருப்பமும் அடுத்து வரும் நெகிழ்வான காட்சியும் அருமை.