“எளியவனுக்கான உரிமைகள் எப்படியெல்லாம் அரசாலும் அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்படுகிறது என்பதை நெஞ்சில் அறைந்து பேசி இருக்கிறது க/பெ ரணசிங்கம். இந்தப்படத்தின் தாக்கம் எப்படியும் இன்னும் சில காலம் மனதில் வடுவாக தங்கி இருக்கும்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் வறண்ட நிலத்தில் விஜய்சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். விஜய்சேதுபதி எப்போதும் மக்கள் நலன் சார்ந்து போராடும் பழக்கத்தைக் கொண்டவர். ஒரு கட்டத்தில் மனைவியின் சொல்லுக்கு இணங்கி வெளிநாடு செல்கிறார். அங்கு அவருக்கு ஒரு விபரீதம் நடக்கிறது. பின் அவருக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் அதிகார கதவுகளை ஓங்கி அடிக்கிறார். அவரின் போராட்டத்திற்கு விடிவு கிடைத்ததா? என்பதே படத்தின் கதை.

இந்தப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரம் ஐஸ்வர்யா ராஜேஷ். தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை ஒவ்வொரு ப்ரேமிலும் நிரூபித்துக் காட்டியுள்ளார். சோக காட்சிகளில் ராமநாதபுரத்தின் வெப்பம் நிறைந்த அனலை மனதிற்குள் ஏற்றி மனதை ரணமாக்குகிறார். விஜய்சேதுபதி வரும் காட்சிகளும் அவர் பேசும் மக்கள் அரசியலும் அவரை மக்கள் செல்வனாக மக்களிடம் கொண்டு சேர்க்கும். மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப்படத்தில் வில்லன் என்பதே நமது சிஸ்டம் தான். எந்த அதிகாரிகளும் தங்கள் கடமையைச் சரியாக செய்யாமலும் மக்களிடம் முறையாக நடந்து கொள்ளாமலும் இருக்கிறார்கள். அதைத் தோலுரித்துக் காட்டியுள்ளார் இயக்குநர் விருமாண்டி.

படத்தின் முக்கியமான ஹீரோ வசனங்கள். ஒவ்வொரு வசனங்களிலும் சிகப்பு நெருப்பு கொந்தளிக்கிறது.

படத்தில் தகிக்கும் காட்சிகளின் வீரியத்தை கேமராமேன் துல்லியமாக நமக்குள் கடத்தியிருக்கிறார். பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே கன கச்சிதம். சபாஷ் ஜிப்ரான்.

ஒரு சாமானியன் அதிகாரத்திடம் தனது உரிமையை மீட்டெடுக்க எத்தகைய இன்னல்களை கடக்க வேண்டிய இருக்கிறது என்பதை கடக்க முடியாத வேதனைகளோடுச் சொல்லி அசரடித்த இயக்குநர் விருமாண்டிக்கு வாழ்த்துகள் 🎊 ரணசிங்கம், சொக்கத்தங்கம்