சினிமா செய்திகள்

ராமராஜன் பல குதிரைகளை ஓட வைத்தவர்” ; இயக்குநர் பேரரசு

 

நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார்

தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் R.ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார். கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி நடிகின்றனர். முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.. ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைத்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ‘சாமானியன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாயகன் ராமராஜன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார், ஆர்வி உதயகுமார், பேரரசு, சரவண சுப்பையா, ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குநர் சரவண சுப்பையா பேசும்போது, “தயாரிப்பாளர் மதியழகன் இன்னும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தரும் பட்சத்தில் ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளராக தொடர்ந்து பயணிப்பார். அதேபோல இயக்குநர் ராகேஷ் திறமையான ஒரு டெக்னீசியன். அவர் இந்த படத்தை எடுத்துக் கொண்ட விதம் ரொம்பவே புதிதாக இருந்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் எனக்கு இது நான்காவது படம். ஒரு மேஜிக்கல் அசைவு இல்லாமல் எந்த படமும் என் நடக்காது. 25 வருடங்களுக்குப் பிறகு இசைஞானியும் மக்கள் நாயகனும் ஒன்றாக இணைந்தது, 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் திரையில் தோன்றுவதற்கு காரணம், 7 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ராகேஷ் மீண்டும் இந்த படத்தை இயக்க காரணம் படத்தின் ஸ்கிரிப்ட் தான். ராகேஷ் என்னிடம் பேசும்போது, சிட்டிசனாகிய நீங்கள் இந்த சாமானியனை வாழ்த்த வேண்டும் என்றார். சாமானியனே ஒரு சிட்டிசன் தானே.. இந்த படத்தில் ராமராஜனுக்கு வழக்கமான கிராமத்து பெயராக இல்லாமல் சங்கர் நாராயணன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் தன் தாத்தா பெயரை மனதில் வைத்து எழுதியதாக கூறினாலும் இயக்குனர் ராகேஷ் அதை படத்தில் வைத்திருப்பதற்காந காரணத்தை நீங்கள் படத்தில் பார்க்கும்போது செமையாக இருக்கும்” என்று கூறினார்.

நாயகன் லியோ சிவகுமார் பேசும்போது, “இந்த படத்தின் டீசர் வெளியீடு தி.நகரில் நடந்தபோது ராமராஜன் சாரை பார்க்க வேண்டும் என்பதற்காக என்னுடைய நண்பருடன் அங்கே சென்றேன். அப்போது என்னை கவனித்த தயாரிப்பாளர் மதியழகன், சில நாட்கள் கழித்து என்னை இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறி அழைத்து நடிக்க வைத்தார். சிறுவயது காலங்களில் இளையராஜாவின் பாடல்கள் கேட்டு வளர்ந்த எனக்கு இன்று அவர் எனது முகத்தைப் பார்த்து ஒரு பாடல் போடுகிறார் என நினைக்கும் போது மிகப் பெருமையாக இருக்கிறது” என்று பேசினார்.

நடிகர் எம்.எஸ் பாஸ்கர் பேசும்போது, “ராமராஜனின் ‘சோலை புஷ்பங்கள்’ படத்தில் நான் டப்பிங் பேசிய காலத்தில் இருந்து இன்று இந்த படத்தில் இணைந்து நடித்ததுவரை எல்லாரிடமும் ஒரே போல பழகக் கூடியவர் ராமராஜன். எனக்கு ஒரு சின்ன ஆசை. அது நிறைவேறும். நிறைவேறனும்.. இப்போது இங்கே இருக்கக்கூடிய மக்கள் திரள் இந்த படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவிலும் இருக்க வேண்டும். கரகாட்டக்காரன் படம் போல அதையும் மீறி இந்த படம் ஓட வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். ராமராஜன் மறுபடியும் இடைவெளி இல்லாமல் நடிக்க வேண்டும். மக்கள் நாயகன் என்கிற பட்டம் அவருக்கு மட்டும் தான்.. அதை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது, “நடிகர் ராமராஜனின் மனம் எப்படி இருக்கிறதோ அதேபோன்று இயல்பான ஒரு நடிகர். ராமராஜனை என்னால் இயக்க முடியாமல் போய்விட்டதே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. நான் படம் இயக்கிய சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு விநியோகஸ்தராக ரஜினியின் தர்மத்தின் தலைவன் படத்தை வாங்கியிருந்தேன். ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. அப்போது ராம நாராயணன் என்னிடம் அதற்கு பதிலாக ராமராஜன் படம் ஒன்றை தருகிறேன், அதை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறினார். ரஜினி படத்திற்கு பதிலாக ராமராஜன் படத்தை ரிலீஸ் செய்வதா என்கிற யோசனைல் ஏற்பட்டது. அதனால் அதை என்னால் வாங்க முடியவில்லை. அந்த படம் தான் கரகாட்டக்காரன். கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் வரை அந்த படம் வசூலித்தது. ஆனால் ரஜினி படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் எனக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டது. ராமராஜன் மனது பூவை விட மென்மையானது. உண்மையிலேயே இவர்தான் சின்ன மக்கள் திலகம். தான் நேசித்தவர்களை எல்லாம் தயாரிப்பாளர்களாக மாற்ற முயற்சித்து அதில் வெற்றி பெற்றவர் ராமராஜன்” என்று பேசினார்

இயக்குனர் பேரரசு பேசும்போது, “ராமராஜன் வனவாசம் முடிந்து வந்துள்ளதாக எல்லோரும் சொன்னார்கள் வனவாசம் முடிந்ததும் பட்டாபிஷேகம் தான். சாமானியன் ஒரு பட்டாபிஷேகத்திற்கு தயாராகி விட்டார். நதியா வளையல், குஷ்பூ இட்லி என நடிகைகளை மட்டுமே புகழ்ந்த ரசிகர்கள் மத்தியில் ராமராஜன் சட்டை என ஒரு நடிகரையும் புகழ வைத்தது ராமராஜன் தான். எனக்கும் அவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. எனக்கும் அவருக்கும் குருநாதர், தாய் வீடு எல்லாமே இயக்குநர் ராம நாராயணனும் தேனாண்டாள் பிலிம்ஸும் தான். அவருக்கு எப்படி ஊர் ராசியோ எனக்கும் அதே போல ஊர் ராசி தான்.. இப்போதெல்லாம் இரண்டு படங்கள் ஓடி விட்டாலே புது கம்பெனிகளுக்கு மட்டுமல்ல, தமிழ் கம்பெனிகளுக்கே கால்சீட் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால் ராமராஜன் பெரிய நடிகராக மாறினாலும் சிறிய தயாரிப்பாளர்கள், தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய இயக்குனர்கள் ஆகியோருக்கு தான் முன்னுரிமை கொடுத்தார். அப்படி ஒரு மனசு அவருக்கு மட்டும் தான் உண்டு. ராமராஜன் ஓடுகிற குதிரையில் ஏறுகிறவர் அல்ல.. பல குதிரைகளை ஓட வைத்தவர்.. தனக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்டு இந்த அளவிற்கு வந்து உட்கார்ந்து இருக்கிறார் என்றால் அவருடைய மனதும் அவருடைய ரசிகர்களும் தான் காரணம்.. தமிழ் திரையுலகில் ராமராஜனின் அடையாளம் கல்வெட்டு மாதிரி இருக்கும். அது என்றும் மறையாது” என்று பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *