‘ஏலே’ சினிமா விமர்சனம்
மனுசனை மனுசன் சரியா புரிஞ்சுக்கிட்டா சங்கடமில்லை. கருத்து சொல்லுது ‘ஏலே.’
தவறான புரிதல் காரணமாக அப்பா (சமுத்திரகனி) – மகன் (மணிகண்டன்) இருவரும் பேசிக் கொள்வதில்லை. காலப்போக்கில் சரியான புரிதல் ஏற்படும்போது பாசப்பிணைப்பு சாத்தியமாகிறது.
அதேபோல் தவறான புரிதலால் இளம் காதலர்கள் மணிகண்டன் – மதுமிதா ஜோடிக்குள்ளும் விரிசல். சரியான புரிதல் ஏற்படும்போது காதல் மீண்டும் பூக்கிறது.
கதை என்னவோ இம்புட்டுத்தான். ஆனால், திரைக்கதை ரொம்ம்ம்ம்பவே நீளம். நீளமென்றாலும் முடிந்தமட்டும் கலகலப்பான காட்சிகளாலும் கண்கலங்கும் காட்சிகளாலும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம். (‘பூவரசம் பீப்பி’, ‘சில்லுக் கருப்பட்டி’ படங்களை இயக்கியவர் இவர்.) உணர்வுபூர்வமான காட்சிகளுக்குப் பஞ்சமில்லை!
சமுத்திரகனி கருத்து சொல்லி கதறவிடாமல் நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் அசத்துகிறார். இரட்டைவேடம் வேறு! ஐஸ் வியாபாரியாக வருபவர் செய்வதெல்லாம் அதகளம்; இன்னொருவரின் கெட்டப் அமர்க்களம்!
கதைநாயகன் மணிகண்டனும் கதை நாயகி கொள்ளை அழகு மதுமிதாவும் இளம் காதலர்களாக இயல்பான நடிப்பால் மனதில் நிற்கிறார்கள்.
கிராமத்து மனிதர்களாக வருகிற நடிகர் நடிகைகள் கூட்டம் மண்வாசனை பிறழாமல் இருப்பது தனித்துவம்.
இனிமை சேர்க்கும் பாடல்கள், காட்சிகளுக்கு நெருக்கமாக பின்னணி இசை… தந்திருப்பது கபீர் வாசுகி, அருள்தேவ் என இருவர்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு வழக்கம்போல் சிறப்பு.
சமுத்திரகனியின் பிணம் காணாமல் போவதன் பின்னணியும் அதன் பிறகான காட்சிகளும் சுவாரஸ்யம். அது நடக்குமா? இது சாத்தியமா என்றெல்லாம் யோசிக்காவிட்டால் கூடுதலாய் ரசிக்கலாம்.
