ரஜினி கேங் – திரை விமர்சனம்
ரேடியோ சவுண்ட் சர்வீஸ் நடத்தும் ரஜினி கிஷனும் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் மகள் த்விவிகாவும் காதலிக்கிறா ர்கள். காதலுக்கு எதிர்ப்பு வரும் என்று தெரிந்ததும் ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.
அந்தக் கல்யாணம் நடந்த பின் பல திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கின்றன. அந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு பின்னணியில் மணப் பெண்ணின் தாலி இருக்கிறது.
அந்த தாலி கணவனை நெருங்க விடாமல் துரத்துகிறது.
கூ ச்சலிடுகிறது. ‘எவண்டா எனக்கு இந்த தாலியை கட்டியது?’ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறது.
அப்படியானால் இது ஆவியின் சேட்டையா என்ற கேள்வி எழும் அல்லவா. உண்மையில் அந்த தாலி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதை கட்டிய பிறகு மணமகளிடம் அந்த எதிர்பாராத மாற்றம் ஏன்? கேள்விகளுக்கு விடை எதிர்பாராத கிளைமாக்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் ரஜினி கிஷன், நடனம்,சண்டை என எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடுகிறார். தாலி கட்டிய மனைவிக்கு என்ன நேர்ந்தது என்று புரியாமல் தவிக்கும் இடத்தில் சிறந்த நடிப்பையும் தருகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் த்விவிகாவின் தோற்றப் பொலிவும் நடிப்பும் அபாரம். ஆவி பிடித்த நிலையில் அவரது ரியாக்ஷன்கள் ஒவ்வொன்றும் நடிப்புக்கும் அவருக்கும் ரொம்பவே நெருக்கம் என்பதை உணர வைக்கிறது.
முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் காமெடிக்கு. கூல் சுரேஷ்,கல்கி ராஜா வில்லன் வரிசையில் இருந்தாலும் அவர்களும் காமெடி பட்டியலில் கதையின் போக்கில் இணைந்து கொள்கிறார்கள்.
எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் ஓகே. ஆவிகள் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியில் ஒளிப்பதிவாளர் என். எஸ். சதீஷ்குமார் தனது முழு வித்தையையும் இறக்கி வைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ரமேஷ்பாரதிபடம் முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கேற்ப கதை தயார் செய்து இயக்கியிருக்கிறார். முனீஷ்காந்த்தை தூங்கி வழிபவராகவும் மொட்டை ராஜேந்திரனை ஆவிகள் மையம் நடத்துபவராகவும் பார்க்கும்போதே சிரிப்பு பிய்த்துக் கொள்கிறது.
காமெடி கேங்.
