‘வேட்டை நாய்’ சினிமா விமர்சனம்
அடியாள்களை குடிக்கு அடிமையாக்கி வைத்துக் கொண்டு தாதாவாகத் திரியும் ராம்கியிடம் முதன்மை வேட்டை நாயாக ஆர்.கே.சுரேஷ்.
அந்த வேட்டை நாய் தனது திருமணத்துக்குப் பின் மனைவின் பாசத்தால் நல்வழிக்குப் போகப் பார்க்கிறது. அதற்கு சிலபல முட்டுக் கட்டைகள் விழ அவற்றுடன் மல்லுக் கட்டி மீள்வதே கதை, திரைக்கதை…
முதலாளிக்கு விசுவாசமான அடிமை, கண்களில் கனல் தெறிக்கும் சண்டை, தன்னை வளர்த்து ஆளாக்கிய அத்தை – மாமா, மனைவியிடம் பாசம் என ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் புகுந்து விளையாடியிருக்கிறார்.
நாயகி சுபிக்ஷாவுக்கு இளவயது; நடிப்பின் தேர்ச்சி முதிர்ச்சி!
ராம்கியின் இளமையும் இருக்கிறது. அவரது நடிப்பில் சுறுசுறுப்பும் இருக்கிறது.
ஆர்.கே. சுரேஷை போட்டியாக நினைத்து கடைசியில் மனம் திருந்துகிற விஜய் கார்த்திக் மனதில் நிற்கிறார்.
நமோ நாராயணன் – ரமா தம்பதியின் நடிப்பும், அந்த கேரள டீச்சரும் அவர் மகனாக வந்து சுபிஷாவை ஒரு தலையாக காதலிக்கிற கெளதமும் ஈர்க்கிறார்கள்.
கணேஷ் சந்திரசேகரனின் இசையில் செல்லக்குட்டி பாட்டு இனிமை. அனிருத் பாட ஆர்.கே. சுரேஷின் குத்தாட்டம் போடும் பாட்டு உற்சாகம்!
ஒளிப்பதிவாளரின் உழைப்பில் கண்களுக்கு விருந்தாகியிருக்கிறது கொடைக்கானல்!
கமர்சியல் சங்கதிகள் அனைத்தும் கலந்திருக்கும் இந்த படத்தில் குடி குடியைக் கெடுக்கும் என்ற விழிப்புணர்வுக் கருத்தை விதைத்திருக்கும் இயக்குநர் எஸ். ஜெய்சங்கருக்கு பெரிதாய் ஒரு பாராட்டு!
