அங்கம்மாள் — திரை விமர்சனம்
பிடிவாத குணம் கொண்டவள் கிராமத்து அங்கம்மாள். அவளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனுக்குத் திருமணமாகி ஏழு வயதில் மகள் இருக்கிறாள்.
மனைவி வீட்டோடு இருக்கிறாள்.
டிவிஎஸ் சேம்ப்பில் வீடு வீடாகச் சென்று பால் வியாபாரம் செய்யும் அங்கம்மாள் இரண்டாவது மகனை டாக்டர் ஆக்கி விடுகிறாள்.
அவள் ஜாக்கெட் அணிவதில்லை. எதற்கும் அஞ்சாத குணம் அவளது தனித்துவம். அதனால்
அவளுக்கு எதிர் பேச்சு பேச ஊர்க்காரர்கள் பயப்படுவார்கள். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கிற மாதிரி
எதையும் முகத்துக்கு நேரே கேட்டு விடுவதால் அவளைக் கண்டால் அனைவருக்கும் பயம்.
டாக்டருக்கு படித்த இளைய மகன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். பெண் வீட்டார் வேற்று மதம். இருப்பினும் சம்மதிக்கிறார்கள்.
இப்போது இளைய மகனின் ஒரே பிரச்சினை, இதுவரை ஜாக்கெட் அணியாத அம்மாவை எப்படியாவது தனது திருமணத்துக்குள் ஜாக்கெட் அணிய சம்மதிக்க வைக்க வேண்டும்.
தன் அம்மாவிடம் அவன் இது குறித்து பேசிய போது மகனுக்காக சம்மதிக்கிறாள். ஜாக்கெட் போட்டுக் கொள்கிறாள். ஆனாலும் அதை ஊர் வேறு விதமாகப் பார்க்க, அவள் கேலியாக உணர்ந்து மனம் மாறுகிறாள். மகனுக்காக மறுபடியும் ஜாக்கெட் விஷயத்தில் அவள் மனம் மாறினாளா? என்பது கதை.
‘உச்சிமலை காத்து உச்சாணிப்பூ ‘கதையை தனது பேத்தியிடம் அங்கம்மாள் கூறுவது போல படம் தொடங்குகிறது. அங்கம்மாள் பாத்திரத்திற்கு கீதா கைலாசம் பொருத் தமான தேர்வாக இருக்கிறார். எப்போதும் வாயில் சுருட்டுடன் புகைபிடித்தபடி இருக்கிறார். மகன்கள் மருமகளிடம் சிடுசிடுத்தாலும் பேத்தியிடம் பாசத்தைப் பொழிகிறார்.
யார் எது கேட்டாலும்
பதிலுக்கு கெட்ட வார்த்தை போட்டு பேசி அதிர வைக்கும் அந்த அங்கம்மாள் அவ்வப்போது அரங்கையும் அதிர்ச்சியில் அதிர வைக்கிறாள். அன்போ பாசமோ எதையும் அதிரடியாக சொல்லித்தான் அவளுக்கு பழக்கம் என்பதை அந்த கேரக்டர் மூலம் அவர் வெளிப்படுத்திய விதம் தனி அழகு. அங்கம்மாவுக்கு விருது நிச்சயம்.
வீட்டில் சச்சரவுகளைக் கண்டு கொள்ளாமல் மனதில் எதையும் வாங்கிக் கொள்ளாமல் மூத்த மகனாக வரும் பரணி தனது ஏமாற்றங்களை வெளிக் காட்டாமல் நாதஸ்வரம் வாசித்து தன்னை ஆற்றுப் படுத்திக்கொள்ளும் இடத்தில் அந்த கேரக்டர் அழகாகி விடுகிறது.
குடும்பத்துக்குள் வீசும் புயல் நடுவே சிக்கிக்கொண்ட மருமகளாக தென்றல் வருகிறார். தான் நடித்த பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். இளைய மகனின் காதலியாக வரும் முல்லை அரசி கவர்கிறார்.
படித்து டாக்டர் ஆக இருந்தாலும் அம்மாவிடம் நேரடியாக வாதாடத் தயங்கும் பாத்திரத்தில் கார்த்திக் சரண் நடிப்பு நன்று.
அங்கம்மாள் தனது மகன்கள் மருமகள் இடையே வீட்டுக்குள் நிகழ்த்தும் சச்சரவு எதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே சின்ன சின்ன சிரிப்புகள் தூவி அந்தக் கிராமத்துக்குள்ளேயே நம்மை வாழ வைத்துள்ளார் இயக்குநர் . அந்த கேசரி தாத்தா கூட நடிப்பில் அத்தனை எதார்த்தம்.
உச்சிமலை காத்து வீச உச்சாணிப்பூ வரும் பாடல் ரசிக்க வைக்கிறது.
என்ஜாய் சாமுவேல் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். இயற்கை ஒளியிலேயே அனைத்துக் காட்சிகளையும் எடுத்துள்ளார்கள்.
முகமது மக்பூல் மன்சூர் இசைஅமைத்துள்ள பாடல்கள் மனசை டச் செய்கின்றன.
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித் துணி சிறுகதையை திரைப்படத்தை திரைப்படுத்திய விதத்தில் தேர்ந்த இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். கிளைமாக்சில் அங்கம்மாள் எடுக்கும் முடிவு கவிதை.
