தேரே இஷ்க் மே – திரை விமர்சனம்
எப்பேர்ப்பட்ட கோபக்கார மனிதனையும் பொறுமை மிக்கவனாக மாற்ற முடியும் என்பதை தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக தேர்வு செய்கிறார் நாயகி. இதற்காக அவர் தேர்ந்தெடுப்பது அடிதடிக்கு அஞ்சாத கல்லூரி மாணவர் தனுஷை.
அவரோ சின்ன கோபத்துக்கும் பெரிய சம்பவம் செய்கிறவர். நாயகியின் எந்த ஒரு அணுகுமுறைக்கும் அவர் இறங்கி வருவதாக தெரியவில்லை. ஆனாலும் தனுஷை சாந்தமிகு இளைஞனாக மாற்றும் தன் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கிறார் நாயகி.
தனுஷை மாற்ற முடிந்தால் மட்டுமே
நாயகியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என்கிற இக்கட்டான நிலை ஏற்படுகிறது.
இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார் நாயகி. ஒரு கட்டத்தில் அது காதலாக மாறுகிறது. அந்த காதல் கைகூடியதா? தனுஷ் வன்முறையை விட்டொழித்தாரா? என்கிற கேள்விகளுக்கான விடையே படம்
கோபக்கார மாணவர், அன்பான காதலர், பொறுப்புள்ள அதிகாரி என வந்தாலும் ஒவ்வொன்றிலும் தனித்துவம் காட்டியிருக்கிறார் தனுஷ். தன்னுடைய காதலை பெயர்த்தெறிந்து விட்டு புதிய காதலனை மணமகனாக தேர்ந்தெடுக்கும் நாயகியை லெப்ட் ரைட் வாங்கும் இடத்தில் தனுஷின் அந்த தரமான சம்பவமும் அந்தக் கோபமும் ‘நடிகன்டா’ சொல்ல வைக்கிறது.
அழகான பெண் அறிவுடனும் இருந்துவிட்டால் எல்லோரும் அவளுக்கு அடிமை என்பார்கள்.அதை இப்படத்தின் நாயகி பிருத்தி சனோன் உறுதி செய்கிறார்.
நிறைமாத கர்ப்பிணியாக முன்னாள் காதலன் தனுஷை தேடி வரும் அந்த கிளைமாக்ஸ் காட்சி முழுக்க அவர் நடிப்பு சிறப்பு.
நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் புஷ்பராஜ் ராய் செளத்ரி, தனுஷை அவமானப்படுத்தும் இடத்தில் தேர்ந்த நடிப்பில்
தடம் பதிக்கிறார்.
துஷார் காந்தி ராய் ஒளிப்பதிவில் திரைக்கதையில் இருக்கும் உணர்வுகளை காட்சிகளிலும் காண முடிகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் பரம சுகம். பின்னணி இசை இன்னும் சுகம்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஆனந்த் எல்.ராய்.
ஏற்றத்தாழ்வு காதலில் நாயகி மேற்கொள்ளும் குழப்பமான மனநிலை தான் இந்தப் படத்தின் ஆணிவேர். அது தொடர்பான காட்சியை சரியாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். உடைந்து நொறுங்கிய தனது காதலை மீண்டும் ஒட்ட வைக்க தனுஷை தேடி வரும் பிருத்தி,
பி றக்கப் போகும் தனது வாரிசை கையில் கொடுத்து விட துடிக்கும் இடம் நெகிழ்ச்சியானது. இயக்குனர் தனது முத்திரையை ஆழமாக பதிக்கும் இடம் இதுதான்.
திரைக்கதை அரதப்பழசு என்றாலும், தனுஷ் கிருத்தி சனோன் நடிப்பும் இயக்குனரின் மேக்கிங்கும் அதை மறக்கடித்து விடுகிறது.
இந்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் தமிழிலும் அதே பெயரில் டப் ஆகியிருக்கிறது.
