தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ’ஹைக்கூ’ படத்தின் மனதை வருடும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட விஷன் சினிமா ஹவுஸ்!
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தலைமையிலான விஷன் சினிமா ஹவுஸ். முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து வரும் விஷன் சினிமா ஹவுஸ் சமீபத்தில் தங்களது தயாரிப்பில் உருவாகி வரும் மூன்றாவது படத்தை அறிவித்தது. இன்று (டிசம்பர் 5, 2025) தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படும் ’ஹைக்கூ’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
படத்தின் கதாநாயகனாக ஏகன் நடிக்க, அவருடன் தெலுங்குத் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நடிகை ஸ்ரீ தேவி அப்பல்லா மற்றும் மோலிவுட்டின் சென்சேஷனல் நடிகை ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டர், இளவயது காதல் மற்றும் மாணவர்களின் நம்பிக்கையை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. யாரும் இல்லாத கேலரியில் வண்ணமயமான நாற்காலிகளில் படத்தின் காதல் ஜோடி அமர்ந்திருக்க அவர்களின் கெமிஸ்ட்ரியை தெரிவிக்கும் வகையில், மேலே இருக்கும் ஹார்ட்டின் ’ஹைக்கூ’ படத்தின் ஃபீல்-குட் கதைக்கருவை அழகாக பிரதிபலிக்கிறது.
இளமை துடிப்புடன் கூடிய கதைகளை திரையில் கொண்டு வருவதற்கு பெயர் பெற்ற யுவராஜ் சின்னசாமி ’ஹைக்கூ’ திரைப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து ஹரிஹரன் ராம் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் அதிர்ச்சி அருண் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய் புல்கான் இசையமைத்துள்ள இந்த படம் நிச்சயம் மெல்லிசை அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுக்கும்.
‘ஜோ’ மற்றும் ’கோழிப்பண்ணை செல்லதுரை’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு விஷன் சினிமா ஹவுஸ் புதிய திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு கதைகள் கேட்டு வருகிறது. முதல் காதல், நட்பு மற்றும் சுய கண்டுபிடிப்பு ஆகியவற்றைக் கொண்டாடும் படமாக ‘ஹைக்கூ’ வர இருக்கிறது.
’ஹைக்கூ’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு புதிய திறமையாளர்கள் மற்றும் இளம் நடிகர்களை ஊக்குவிக்கும் விஷன் சினிமா ஹவுஸின் தயாரிப்பாளர் டாக்டர். அருளானந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை படக்குழு தெரிவித்துள்ளது. டீசர், கிளிம்ப்ஸ் மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி உட்பட படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.
இந்தப் படத்திற்கு ஏகன் அருளானந்து எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும், ஸ்ரீனிவாஸ் நிரஞ்சன் இணைத் தயாரிப்பாளராகவும் உள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் பேனரில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து ‘ஹைக்கூ’ படத்தைத் தயாரிக்கிறார்கள்.
