நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று..(ஜூலை 21)
தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர் என்றால், நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறலாம்.
ஒரு பாத்திரத்திற்கு உயிர் கொடுக்க எப்படிப்பட்ட நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, அந்த பாத்திரமாக மாறி நடிப்பதில் இன்றளவும் அவருக்கு இணையாக யாரும் தோன்றவில்லை என்றே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட திரையுலக நடிப்பு மாமேதை சிவாஜி கணேசன் அவர்களின் 16வது நினைவு தினம்தான் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் கணேசனாக இருந்த அவர் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக அற்புதமாக நடித்ததால், அவருடைய நடிப்புத்திறனை பாராட்டிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த அவரது பெயர் சிவாஜி கணேசனாக மாறியது.
50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை…எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது.
படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப்படித்தான் இருப்பார்கள்..என்று நம் கண் முன் நிறுத்திய ஒப்பற்ற கலைஞன்.
திரையுலகம் இருக்கும் வரை சிவாஜியின் புகழ் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்படிப்பட்ட நீங்காப்புகழ் பெற்ற சிவாஜி கணேசனை நினைவு கொள்வோம் !