நடிகர் அருள்நிதியின் ‘டைரி’!
தனித்துவம் மிக்க கதைக் களத்தில், தனது பாத்திரப்படைப்பு மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதா என்பதை மிகுந்த ஆர்வத்துடன் கவனமாகத் தேர்வு செய்து நடிப்பதுதான் நடிகர் அருள்நதியின் வழக்கம். அதனால்தான் அவர் பாராட்டப்படும் கலைஞனாக இருப்பதுடன், அவரது படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் தேடித்தருவனவாகவும் அமைகின்றன. தொடர் வெற்றிகளை ஈட்டி வரும் அருள்நிதி தற்போது நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ‘டைரி’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை (21-07-2020) வெளியிடப்பட்டது.
இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இன்னாசி பாண்டியன் என்ற அறிமுக இயக்குநரின் படைப்பாக உருவாகும் ‘டைரி’ மர்மங்கள் நிறைந்த புலனாய்வு த்ரில்லர் வகையைச் சேர்ந்ததாகும்.
இது குறித்து தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கூறியதாவது….
“சர்வதேச ரசனைகளைக்கு ஏற்ற வகையிலான படங்களை உருவாக்குவதில் எங்கள் தயாரிப்பு நிறுவனம் கவனம் செலுத்துகிறது. இயக்குநர் இன்னாசி பாண்டியன் இந்தக் கதையை என்னிடம் கூறியபோது, படத்தின் கதைக் கரு மற்றும் அதை அவர் விவரித்த விதத்தில் நான் பெரிதும் கவரப்பட்டேன். திகில் மற்றும் மர்மங்களுடன் ஆச்சரியங்கள் நிரம்பிய கதை இது. திரைத்தொழிலின் ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அருள் நிதியின் படங்கள் லாபமீட்டித் தருவதால், இப்போது அவரை தயாரிப்பாளர்களின் சொத்து என்று சொல்லலாம். படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் மிகுந்த நம்பிக்கையூட்டுபவர்களாக இருப்பதால், தனிப்பட்ட முறையில் நான் ‘டைரி’ படத்தை திரையில் காண ஆவலாக இருக்கிறேன். அரசாங்கத்தின் அனுபதி கிடைத்ததும் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடக்கும்” என்றார்.
பவித்ரா பிரதான வேடத்தில் நடிக்கும் ‘டைரி’ படத்தில் வி.ஜெ.ஷாரா, ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் கிஷோர், சாம்ஸ் நக்கலைட்ஸ் தனம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ரோன் எதன் யோஹான் இசையமைக்க, எஸ்.பி.ராஜா சேதுபதி படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். பிரதீப் தினேஷ் சண்டைக் காட்சிகளை அமைக்க ஞானக்கரவேல் பாடல்களை இயற்றுகிறார்.