சினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்நடிகைகள்

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த நடிகை


நெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து உலகப்புகழ்பெற்று விட்டார் ஒரு தமிழ்ப்
பெண். அவர் பெயர் மைத்ரேயி ராமகிருஷ்ணன்(Maitreyi Ramakrishnan).அவருக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது அதற்குள் எட்டுதிக்கும் அவர் சென்றடைந்து விட்டார்.

ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங்
(Mindy Kaling) என்பவர் இயக்கிய நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever ).அந்தத் தொடரின் வெற்றியை மின்னணு ஊடகங்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.சமூக ஊடகங்களில் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறார்கள்.இந்த மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர் ஈழத்திலிருந்து கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள். மைத்ரேயியின் பள்ளிப்படிப்பு கனடாவில் தான். பள்ளியில் படித்த போதே நாடகங்களில் நடித்தும் ,சிலவற்றை எழுதி இயக்கியுமிருக்கிறார்.
பொதுவாக ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்றால் முறையான நடிப்புப் பயிற்சி பெற்றவர்கள்தான் உள்ளேயே நுழைய முடியும். ஆனால் அப்படி எந்த ஒரு பயிற்சியும் பெறாத இவர், நடிப்புக்கான பல்வேறுபட்ட சோதனைகளைக் கடந்து ,வடிகட்டுதல்களில் மீண்டெழுந்து இந்தத் தொடரில் நடிக்கத் தேர்வாகி இருக்கிறார்.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவிருந்த இளம் நடிகைக்கான தேர்வுக்கு இவரது தோழிதான் விண்ணப்பித்திருந்தார். அவர் வற்புறுத்தலால் மைத்ரேயியும் விளையாட்டாகத்தான் விண்ணப்பித்திருந்தார். இதற்காக 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பித்து இருந்திருக்கிறார்கள். நம்பிக்கையற்றிருந்த மைத்ரேயிக்கு எழுத்துப் பிரதி அனுப்பி அதில் ஒரு பாத்திரத்தை தேர்வு செய்து வசனத்தைப் பேசி நடித்து வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பச் சொல்லியிருந்தார்கள். விளையாட்டாகத்தான் அனுப்பினார். மீண்டும் இன்னொரு சமயத்தில் மற்றொரு பிரதி அனுப்பி அடுத்த கட்ட சோதனை. அதற்கும் வீடியோ அனுப்பி வைத்தார். இப்படி ஆறு பிரதிகளுக்கும் நடித்து அனுப்பி வைத்தார். எல்லாவற்றையும் நடித்து முடித்து அனுப்பியபோது அது பற்றிய கனவு எதுவும் இல்லாமல்தான் இருந்தார். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் ஆயிரம் பேர் 2000 பேர் நீக்கப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு தேர்வானது ,பிறகுதான் இவருக்கு தெரியுமாம்.

நேரடித் தேர்விலும் கலந்து கொண்டார். பிறகு இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை.எப்படியோ அவர்கள் செலவில் அமெரிக்கா சென்று வந்ததுதான் லாபம் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் அழைப்பு வந்திருக்கிறது இவரால் நம்பவே முடியவில்லை.நடிக்கத் தேர்வாகி விட்டார். நடித்தும் விட்டார்.

அந்தத் தொடரில் நடித்த அனுபவம் பற்றிக் கூறும்போது “அந்தப் படப்பிடிப்பை ஒரு பள்ளியின் வகுப்பறையில் இருப்பது போல்தான் நான் உணர்ந்தேன். பெரிய வித்தியாசமாக எனக்குப் படவில்லை .முதல்நாளே அடுத்தநாள் நடிக்கவுள்ள காட்சிக்கான பிரதிகளைக் கொடுத்துவிடுவார்கள். நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் .படப்பிடிப்பு நேரம் எப்போதும் நீட்டிக்கப்படாது. காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் சரியாக முடிந்துவிடும். நான் இரவெல்லாம் வசனங்களை மனப்பாடம் செய்தேன். கேமரா முன் இருக்கும் போது எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு காட்சி சரியாக வர வேண்டும் என்றால் அவர்கள் சமரசம் ஆக மாட்டார்கள். அப்படி ஒரு காட்சியை அவர்கள் 25 தடவை கூட எடுத்தனர். திருப்பித் திருப்பி எடுத்திருக்கிறார்கள் .வற்புறுத்தி நம்மை வேலை வாங்க மாட்டார்கள். ஆனால் இயல்பாக அந்தக் காட்சி வரவேண்டுமென்று பொறுமை காப்பார்கள்.”என்கிறார்.

ஹாலிவுட் வாய்ப்பு ,ஆங்கிலம் பேசவேண்டிய நடிகை என்ற வகையில் உங்களது பெயரை மாற்றி விடுவீர்களா? என்று கேட்ட போது ,

“நான் கனடிய தமிழ்ப் பெண் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோரின் மகள் நான்.அந்த அடையாளத்தை நான் இழக்க மாட்டேன் அதனால் என் பெயரை மாற்ற மாட்டேன். நான் ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக இருந்தாலும் ஆங்கிலம் பேசி நடிப்பதாக இருந்தாலும்கூட என் பெயரை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன் ”
என்கிறார் தீர்மானமாக

தொடர் நடிப்பு அனுபவம் பற்றி மேலும் பேசும் போது,
“அந்தத் தொடரில் நடித்தபோது கூட இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய தமிழ் தம்பதிகளின் மகளாகத் தான் நடித்தேன். இப்படி நடிப்பதில் எனக்கு வித்தியாசம் ஒன்றும் இல்லை. அதே நேரம் நான் இலங்கைத் தமிழ் பேசி நடிப்பதைவிட இதை ஒரு சிறு சவாலாகவும் மகிழ்ச்சியாகவும்தான் உணர்ந்தேன். உச்சரிப்பு, நடை உடை ,பாவனையில் சிறு மாற்றம் அவ்வளவுதான். அமெரிக்க இந்திய தமிழ்ப்பெண் ஒருத்தி ஆங்கிலேயர்கள் படிக்கும் உயர்நிலைப்பள்ளியில் அடையாளச் சிக்கலுக்கு ஆளாவது , தன்னை நிரூபிக்கப் பாடுபடுவது என்று கதை போகிறது. அந்தப் பெண்ணுக்குத் தாயார் ,நண்பர்கள் என்று பிரச்சினைகள். அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவள் என்ன செய்கிறாள் என்று செல்கிறது கதை.” என்கிறார்.

” நான் தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் உன்னதமான மொழி. . “என்று கூறும் மைத்ரேயி ராமகிருஷ்ணன், “தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் நான் ஏதாவது செய்ய வேண்டும். நான் வாழும் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதில் நான் பெருமைப்படுகிறேன். என்னாலான எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்..” என்கிறார்.

மைத்ரேயி ராமகிருஷ்ணனைப் பின்தொடரும் ரசிகர்களாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை என பல்வேறு நாடுகளிலும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறார்கள்.

மரத்தின் கிளைகள் விண்ணை நோக்கிச் சென்றாலும் அதன் வேர்கள் இருப்பது மண்ணுக்குள் தான் என்பது போல உலக ரசிகர்களை கவர்ந்த போதிலும் மைத்ரேயி, தான் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறார்.அவரை வாழ்த்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *