இணையதளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்யும் படங்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா தொழில் முடங்கி உள்ளது. மேலும், படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தி படங்களையும் இணையதளத்தில் வெளியிட தயாராகி வருகிறார்கள்.அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சிதாபோ, செஹ்ரே, வித்யாபாலன் நடித்துள்ள கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை கதை ஆகிய படங்களை இணையதளத்தில் வெளியிட ஆலோசிக்கின்றனர். நவாசுதின் சித்திக் நடித்துள்ள கூம்கேது படம் வருகிற 22-ந் தேதி இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து வெற்றிகரமாக ஓடிய காஞ்சனா படம் இந்தியில் அக்ஷய்குமார் நடிக்க லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இந்த படத்தையும் இணையதளத்தில் வெளியிட ஆலோசனை நடைபெறுகிறது. வருண் தவான் நடிக்கும் கூலி நம்பர் 1, கியாரா அத்வானியின் இந்தூ கி ஜவானி, ஜான்வி கபூரின் குஞ்ஜன் சக்சேனா, அபிஷேக் பச்சன் நடித்துள்ள ஜூந்த் ஆகிய படங்களும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகலாம்.