பாலகுமாரனுக்கு அஞ்சலி செலுத்த ஆன்லைனில் மேய்ந்த போது பாலகுமாரன் சொன்னதாக கிடைத்த சேதியிது:
சினிமாவைப் பற்றி எனக்கும் பேச விருப்பம் உண்டு। சினிமாவில் அற்புதமான மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். அவர்களின் அன்பில் , அரவணைப்பில் , நட்பில் திளைத்திருக் கிறேன். குறிப்பாக நண்பர், நடிகர் ரஜினிகாந்த்-துடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அவர் கம்பீரத்தை பல்வேறு சமயங்களில் நான் கவனித்து அதிசயப்பட்டிருக்கிறேன். பாட்ஷா படத்தின் கதை விவாதம் நடந்து கொண்டிருந்தது. ரஜினிகாந்த் அலுவலக மாடியில் ஒரு பெரிய ஹாலில் அமர்ந்திருந்தோம். அந்த ஹாலில் இரண்டு ஒற்றை சோபாக்களும், மூன்று பேர் அமரக் கூடிய ஒரு நீண்ட சோபாவும் இருந்தன..
ஒற்றை சோபாக்களில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் , ரஜினிகாந்த் ஆகியோர் அமர்ந்திருக்க, மூன்று பேர் அமரக் கூடிய சோபாவின் நுனியில் நான் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பேன். அந்த மூன்றாவது சோபாவில் வேறு யாரேனும் வருவார்கள் , உட்காருவார்கள், நகர்ந்து போவார்கள்। மூன்று பேருமே விவாதத்தில் ஈடுபட்டிருந்தால் இது தான் உட்காரும் விதமாக இருந்தது। விவாதத்தினுடைய சூடு ஏற ஏற, நான் உட்கார்ந்து பேச முடியாமல் என் வழக்கப்படி எழுந்து நின்று வேட்டியை மடித்து கட்டி, கைகளை ஆட்டியபடி அந்த காட்சியை விவரித்து வசனத்தோடு என்னுடைய வெளிப்பாடை சொல்லிக் கொண்டிருக்க, ரஜினிகாந்த் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தார்.
நான் நடப்பது பார்த்து எழுந்து நின்று தள்ளிப் போய் மூன்று பேர் அமரக் கூடிய அந்த நீண்ட சோபாவின் பின் பக்கம் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஒரு பேச்சு சுவாரசியத்தில் மெய்மறந்து அவருடைய நாற்காலியில் அமர்ந்து அவரிடம் பேசும் போது, மூன்று பேர் அமரக் கூடிய அந்த நீண்ட சோபாவில் அவர் அமர்ந்து கொண்டார்.
என்னிடத்தில் சுரேஷ் கிருஷ்ணா ஏதோ சொல்ல முற்படுவது தெரிந்த போது குறுக்கிட வேண்டாம் என்று கையமர்த்தி விட்டு தொடர்ந்து நான் வேகமாக அந்த காட்சியை ரஜினிகாந்த் -டம் பேசிக் கொண்டிருந்தேன்.
சுரேஷ் கிருஷ்ணா எழுந்து அருகே வந்து காதோரம் “அவருடைய நாற்காலியில் அமர்ந்து பேசுகிறீர்கள்.தயவு செய்து எழுந்திருங்கள்” என்று மெல்ல சொன்னார்.
நான் திடுக்கிட்டு என் தவறை உணர்ந்தேன். நான் எழுந்திருக்க முற்படும் போது, சுரேஷ் கிருஷ்ணா பேசியதையும் நான் எதிரொலிப்பதையும் அறிந்து ரஜினிகாந்த் என் தோளை அழுந்தப் பற்றி உட்கார வைத்து “உட்காருங்கள்.இது ஒன்றும் சிம்மாசனம் அல்ல.வெறும் சோபா. ஆசனம். யார் வேண்டுமானாலும் உட்காரலாம்” என்று உரத்த குரலில் சொல்லி தொடர்ந்து என்னை பேசுமாறு கட்டளையிட்டார்। ஆனால் நான் உட்கார்ந்திருப்பது அவருடைய நாற்காலி என்று தெரிந்த பிறகு தொடர்ந்து என்னால் பேச முடியவில்லை।நான் எழுந்து நின்று என்னுடைய இடத்திற்கு வந்து விட்டேன்। அன்றைய விவாதம் முடியும் வரையில் ரஜினிகாந்த் அந்த ஒற்றை சோபாவில் உட்காரவில்லை.
வீடு திரும்பும் போது ரஜினிகாந்த் அது ஒன்றும் சிம்மாசனம் அல்ல என்று சொன்னதும், தோளை அழுத்தி அமர்த்தியதும், தொடர்ந்து பேச கட்டளையிட்ட கம்பீரமும், பண்பும்,எளிமையும், பெருந்தன்மையும் ஞாபகத்திற்கு வந்தன. நாற்காலி என்பது ஒரு கெளரவமான விஷயம் தான். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அது நாற்காலி தான் என்று சாதாரணமாக சொன்ன அந்த மனிதரை இன்றளவும் என் மனம் நேசிக்கிறது..