சினிமா செய்திகள்

வெங்கட் பக்கர் நல்ல இயக்குநர் – ஜி.வி.பிரகாஷ்

காலையில் தொலைபேசியில் வெங்கட் பக்கர் இறந்துவிட்டார் என்ற தகவலைச் சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எந்த வேலையும் ஓடவில்லை. இன்று இந்த வேலைகள் எல்லாம் என்று திட்டமிட்டு இருந்த அனைத்துமே மறந்துவிட்டது. எந்தளவுக்கு எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர், சகோதரர் என்று வெங்கட் பக்கரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

நான் பணிபுரிந்த இயக்குநர்களோடு மிகவும் நட்பாகிவிடுவேன். அது என்னோடு பணிபுரிந்த அனைவருக்குமே தெரியும். இந்த மறைவு என்பது என்னால் இப்போது வரை நம்பமுடியவில்லை. தமிழ்த் திரையுலகில் விரைவில் நல்ல இயக்குநர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்க வேண்டியவர் சென்றுவிட்டார்.

‘4G’ கதையை அவர் என்னிடம் சொல்லும் போது, உடனே ஒப்புக் கொண்டேன். வித்தியாசமான களம் என்றிருந்தாலும், அந்தக் களத்தில் அவருடைய காட்சியமைப்புகள் மற்றும் அந்த கதையில் அவருக்கு இருந்த நம்பிக்கை. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் அவருடன் பேசியது, பழகியது எல்லாம் மறக்கவே முடியாது. வயது சிறியது என்றாலும், மூளை பெரியது. சொன்ன கதையைச் சொன்ன நாட்களை விட, மிகக் குறைவான நாட்களிலேயே முடித்து கொடுத்துவிட்டார். ‘4G’ கதைக்களம் பற்றி படம் தயாரானவுடன் சொல்கிறேன். அந்தக் கதையோடு அவர் அந்தளவுக்கு ஊறியிருந்தார்.

தமிழ்த் திரையுலகில் எப்படியாவது ஒரு இயக்குநராக ஜொலித்துவிட வேண்டும் என்று நினைத்த ஒரு இயக்குநர் இன்று காலமாகிவிட்டார். அவர் இந்த உலகை விட்டு மறந்தாலும், அவருடைய இயக்கத் திறமையை ‘4G’ படம் மூலம் நாம் உணர்வோம். கண்டிப்பாக அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என இருக்கும் போது வெங்கட் பக்கர் பற்றி இன்னும் நிறையச் சொல்வேன்.

கண்டிப்பாக என் வாழ்வில் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ப்ரோ…

கண்ணீருடன்
ஜி.வி.பிரகாஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *