சென்னை பைல்ஸ் முதல் பக்கம் – திரை விமர்சனம்
நகரத்தில் ஒரே ஸ்டைலில் நடக்கும் தொடர் கொலைகள் பொதுமக்களை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது.
இந்த கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவுக்கு வந்து சேர்கிறது. இது விஷயத்தில் அவருக்கு துப்பறிய உதவுகிறார் வெற்றி. இவர் யாரென்றால் காலஞ்சென்ற பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ஒருவரின் மகன்.
இவரது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை பிரசுரிக்க விரும்பிய ஒரு பத்திரிகை, இவரை சென்னையில் உள்ள தனது பத்திரிகை அலுவலகத்திற்கு அழைக்க… வந்த வேலை முடிந்து கிளம்பும்போது, இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த தொடர் கொலை விஷயத்தில் தம்பி ராமையாவுக்கு வெற்றி சில ஆலோசனைகளை சொல்லப் போக…
அத்தனையும் சரியாக இருப்ப தோடு கொலைகாரனை நெருங்கவும் உதவுகிறது. கொலையாளியை கண்டு பிடித்தார்களா? தொடர் கொலைகளுக்கான நோக்கம் என்ன? என்பது மீதிக் கதை. நாயகனாக வரும் வெற்றி தனது புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மூலம் கொலைகாரனை பிடிக்க காவல்துறைக்கு சொல்லும் அத்தனை ஆலோசனைகளும் ஒரு கிரைம் நாவலு க்கான விறுவிறுப்பு பக்கங்கள்.
பத்திரிகை ஆசிரியராக வரும் ஷில்பா மஞ்சுநாத், வில்லனிடம் காரில் மாட்டிக் கொண்டு தப்பிக்கும் ஒரே இடத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு.அதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் தம்பி ராமையா, தன் வழக்கமான அலப்பறைகளால் சிரிக்க வைக்கிறார். மகள் தொடர்பான சோக காட்சிகளில் பாசமிக்க தந்தையாக மனதில் நிறைகிறார்.
திருடனாக வரும் ரெடின் கிங்ஸ்லி சிரிக்க வைக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் மகேஸ்தாஸ், ஆறடி உயரத்தில் வந்து பயமுறுத்தினாலும் கொஞ்சம் நடிப்பையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
அரவிந்த் ஒளிப்பதிவும் ஏஜிஆர் இசையும் படத்துக்கு கூடுதல் பக்கபலம். அனிஸ் அஷ்ரப் எழுதி இயக்கியிருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார். அதோடு பெண்கள் எந்த சூழலிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் எச்சரிக்கை மணி அடித்து சொல்லியிருக்கிறார். அந்த வகையில் இந்தமுதல் பக்கம், முழுமைப் பக்கம்.
