மீஷா – திரை விமர்சனம்
சாதிய பாகுபாடு மூலம் மக்களை பிளவுபடுத்தி அரசியல் கட்சிகள் எப்படி ஆதாயம் தேடிக் கொள்கிறது என்பதை இரண்டு நண்பர்களை மையமாக கொண்டு சொல்லி இருக்கிறார்கள்.
வெவ்வேறு சாதியை சேர்ந்த கதிர் மற்றும் ஹக்கிம் ஷா பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். கல்லூரி பருவத்தில் அரசியல் கட்சி ஒன்றில் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அந்த கட்சியோ மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகளை தடுத்து, அதன் மூலம் ஆதாயம் தேடுவதை அறிந்து கொள்ளும் கதிர், கட்சியை எதிர்த்து மக்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார்.
இது கட்சிக்கு பொறுக்குமா? கதிரை வீழ்த்த கட்சி விரிக்கும் சதி வலையில், அவனது இரண்டு நண்பர்கள் சிக்கிக்கொள்ள, அதன் மூலம் நண்பர்கள் வாழ்க்கை என்னவானது? கதிர் என்னவாகிறான்? என்பதை இதயம் தடதடக்கும் வகையில் சொல்லி இருக்கிறார்கள்.
கதிருக்கு மலையாள சினிமாவில் இது முதல் படம். முதல் படத்திலேயே அழுத்தமான கேரக்டரை அனாயாசமாக செய்திருக்கிறார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, வேதனையில் துடிக்கும் காட்சிகளில் கதிரை காண முடியாமல் அந்த கேரக்டரே நம் முன் நிற்கிறது. வெல்டன் கதிர்.
கதிரின் நண்பராக ஹக்கிம் ஷா, உணர்வுகள் மூலம் நடிப்பை கடத்தி விடும் வேலையை அழகாக செய்து இருக்கிறார். வனப்பகுதி விடுதியில் நண்பன் கதிர் பூடக மாக பேசி தன்னை வார்த்தையால் அளவெடுக்கும் இடத்தில் கதிர் அருகில் உள்ள துப்பாக்கி கூட தன்னை பயமுறுத்துவதாக உணரும்போது வெளிப்படும் எக்ஸ்பிரஷன்கள் அற்புதம். கிளைமாக்சில் தனது நண்பருக்கு நேர்ந்த கொடூரத்தை சொல்லி கதறும் காட்சியில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
வேட்டைக்காரராக நடித்திருக்கும் சைன் டாம் சாக்கோ, காட்டுக்குள்ளான அந்த வேட்டை பயணத்தை தன் நடிப்பால் வெகுவாக ரசிக்க வைக்கிறார். அரசியல்வாதியாக வரும் ஜியோ பேபியிடம் நிஜ அரசியல்வாதிகள் கூட பாடம் கற்கலாம் போல. அப்படி ஒரு நடிப்பு.
ஒளிப்பதிவாளர் சுரேஷ் ராஜன் கேமரா காடு மேடாக பாய்ந்து வனப்பகுதி அழகை அள்ளி வந்திருக்கிறது.
எம் சி ஜோசப் இயக்கி இருக்கிறார்.
உடன் இருப்பவர்களின் துரோகங்களினால் தான் மக்களை உண்மையாக நேசிக்கும் தலைவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். முதல் பாதியில் தந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியிலும் தந்திருக்கலாம்.
