திரை விமர்சனம்

அக்யூஸ்ட் – திரை விமர்சனம்

சென்னை புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்கு கொலை வழக்கில் கைதான கணக்கு (உதயா) என்கிற கைதியை போலீஸ் வேனில் அழைத்துப் போகிறார்கள். அவனை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் போலீசாரில் வேந்தனும் ஒருவன்.
இந்த பயணத்தில் கணக்கை கொல்ல ஒரு ரவுடி கூட்டம் துரத்துகிறது. இன்னொரு பக்கம் உயர் போலீஸ் அதிகாரி தரப்பிலும் சேலம் போவதற்குள் கணக்கின் கணக்கை முடிக்க உத்தரவிடுகிறார்.

இருதரப்பு கொலை முயற்சியில் இருந்தும் கணக்கு தப்பினானா…யார் இந்த கணக்கு? என்ற கேள்விக்கு பரபரப்பும் விறுவிறுப்பும் இணைந்த திரைக்கதை பதில் தருகிறது.
கொலைக் குற்றம் சாட்டப்பட்ட விசாரணைக் கைதியின் கடந்த காலத்தை, அவ்வப்போது பிளாஷ்பேக் மூலம் சொல்லும் திரைக்கதை உத்தியே அடுத்தடுத்த காட்சிகளை சுவாரசியமாக்கி விடுகிறது.

கணக்கு என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் உதயா, கலகலப்பும் துறுதுறுப்புமாக படம் முழுக்க வருகிறார். காதல் காட்சிகளில் ஒரு வெள்ளந்தியான இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். சண்டைக் காட்சிகளில் அதிரடியாக கலக்குகிறார்.
காதலி ஜான்விகாவுடனான காதல் காட்சிகளில் ஒட்டு மொத்த அன்பையும் கொட்டும் உதயா, அதே காதலிக்கு தன் மீது ஏற்படும் சந்தேகத்தைப் போக்க வழி தெரியாமல் அரற்றும் இடத்தில் மனதை கலங்கடிக்கவும் செய்கிறார்.

மேலதிகாரி உத்தரவை ஏற்று தன்னை கொல்ல மனதளவில் தயாராகி விட்ட அஜ்மலிடம், உங்க கையால சாகறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும் சார் என்று சொல்லும் இடத்தில் ‘சாவு என்னடா சாவு உன் அன்புக்கு முன்னால’ என்ற உயிரையும் தாண்டிய வாஞ்சை தான் முன்னிற்கிறது

உதயாவின் காதலியாக நடித்திருக்கும் ஜான்விகா நடனத்திலும் நடிப்பிலும் வசீகரிக்கிறார். வேந்தனாக வரும் அஜ்மல் அதற்கேற்ற மிடுக்கை தோற்றத்திலும் நடிப்பிலும் காட்டியிருக்கிறார். உதயாவின் முன் கதையை தெரிந்து கொண்டதில் இருந்து அவரைக் காப்பாற்ற முனையும் அத்தனை இடங்களிலும் நடிப்பில் தனித்துவ முத்திரை பதிக்கிறார்.  விடுதி உரிமையாளர் ராமா நாயுடுவாக வந்து நகைச்சுவையை தெறிக்க விட்டிருக்கிறார் யோகிபாபு.

அரசியல் கட்சி தலைவராக டி.சிவா, எம் எல் ஏ வாக பவன், அவர் மனைவியாக சுபத்ரா, பவனின் தம்பியாக ஸ்ரீதர் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் தீபா பாஸ்கர், தம்பிக்கு ஏற்ற அக்காவாக வசீகரி க்கிறார்.

பஸ் விபத்துக்குள்ளாகும் காட்சியின் இயல்புத் தன்மைக்காக ஒளிப்பதிவாளர் மருதநாயகத்துக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்
சில்வாவுக்கும் ஸ்பெஷல் பாராட்டு.

நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள் ரசனை.
எழுதி இயக்கியிருக்கிறார் பிரபு ஸ்ரீனிவாஸ். எளிய மனிதர்களை தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் மேல் தட்டு மனிதர்களை படம் பிடித்து காட்டி இருக்கிறார். சமுதாயப் பார்வையுடன் கூடிய கதையை கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் காட்சிப் படுத்திய விதத்தில் படத்தை வெற்றிப் பட்டியலில் சேர்த்து விடுகிறார்.