சரண்டர் – திரை விமர்சனம்
தேர்தல் போன்ற முக்கியமான காலகட்டங்களில் துப்பாக்கி வைத்திருப்போர் தங்கள் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் சரண்டர் செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும்
நிலையில் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் ஒரு காவல் நிலையத்தில் தனது துப்பாக்கியை சரண்டர் செய்கிறார். அந்த துப்பாக்கி காணாமல் போகிறது. தேர்தல் முடிந்ததும் அந்த துப்பாக்கியை மன்சூர் அலிகானிடம் ஒப்படைக்க வேண்டும். அதனால் அதற்குப் பொறுப்பாக இருந்த தலைமைக் காவலர் லால் சிக்கலில் மாட்டுகிறார்.
அதேநேரம், தேர்தல் பட்டு வாடாவிற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அரசியல்வாதியின் பத்து கோடி ரூபாய் காணாமல் போகிறது. அதிலும் காவல்துறை சம்பந்தப்பட்டிருக்கிறது.
துப்பாக்கியைத் தொலைத்த லால் நிலை என்ன? தொலைந்த 10 கோடி ரூபாய் பணத்தின் நிலை என்ன?
இரண்டு கேள்விகளுக்கும் பரபரப்பான திரைக்கதை விடை தருகிறது.
நாயகனாக பயிற்சி உதவி ஆய்வாளர் வேடத்தில் தர்ஷன் நடித்திருக்கிறார்.தொலைந்து போன துப்பாக்கியை கண்டுபிடிக்கும் பொறுப்பு அவரிடம் தரப்பட, .அதை அவர் திறம்பட செய்திருக்கிறார். நடிப்பில் பொறுப்பு மிக்க ஒரு காவல்துறை அதிகாரியை கண் முன் நிறுத்துகிறார்.
வயதான தலைமைக்காவலராக நடித்திருக்கிறார் லால். நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் எனலாம். நேர்மையாக இருப்பவர்களுக்கு காவல்நிலையத்தில் என்ன மரியாதை கிடைக்கும் என்பதை அவரது முக பாவங்கள்
துல்லியமாக உணர்த்துகின்றன. ஒட்டுமொத்த கதைக்கும் இந்த கேரக்டரே ஜீவன் என்பதை தன் நடிப்பில் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார், லால்.
காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் அரோல் டி.சங்கர் மனிதநேய மாண்பாளராக மனதில் இடம் பிடிக்கிறார்.
தாதாவாக நடித்திருக்கும் சுஜித் நடிப்பில் அதகளம் செய்கிறார். அவர் தம்பிnவில்லன் நடிப்பில் இன்னொரு சூறாவளி.
நாயகியாக பாடினிகுமார் வந்து போகிறார்.
அந்த ஏழை பெண்ணும் அவள் மகனும் திரைக்கதையின் அச்சாணி என்பதால் அவர்கள் வரும் காட்சி கனம் பெறு கிறது .
எழுதி இயக்கி இருக்கும் கௌதமன் கணபதி ஒரு சாதாரண சம்பவத்தை பரபரப்பு திருப்பங்களுடன் தந்து கடைசி வரை ரசிகனை படத்தோடு ஒன்றி விடும் அதிசயத்தை செய்திருக்கிறார். நிஜமாகவே அந்த கிளைமாக்ஸ் இன்ப அதிர்ச்சி.
நல்ல கதைக்கு ரசிகர்கள் எப்போதுமே சரண்டர் தான்.
