திரை விமர்சனம்

உசுரே – திரை விமர்சனம்

உசுரே

-திரை விமர்சனம்

காதலை புதிய கோணத்தில் சொல்லி இருக்கும் படம். எதிர் வீட்டில் புதிதாக குடி வரும் ஜனனி மீது காதலாகிறார் டிஜே அருணாசலம். ஜனனியோ இந்த காதலை கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் டிஜேவின் இந்த ஒரு தலைக் காதல் ஜனனி அம்மாவிடமிருந்து செருப்படியும் வாங்கித் தருகிறது. உண்மைக் காதலுக்கு செருப்படி கூட வெகுமானம் தான் என்று எண்ணும் வரிசையில் நமது காதலனும் இருக்க…
தொடர்ந்து தனது காதல் முயற்சியை தொடர்கிறார்.

ஒரு கட்டத்தில் நாயகனின் இந்த விடாப்பிடியான காதலுக்கு ஓகே சொல்கிறார்
ஜனனி. ஆனால் நாயகனை சந்திக்கும் போது , நான் சிறுவயதாக இருக்கும் போது அப்பா
எங்களை விட்டு போய்விட்டார். அம்மா தான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தார். அம்மாவுக்கு பணம் தான் எல்லாமே.ஒரு பத்து லட்ச ரூபாய் ரெடி பண்ணி அம்மா கிட்ட கொடுத்தீங்கன்னா மனசு மாறிடுவாங்க. நம்ம கல்யாணமும் நடக்கும் என்று சொல்ல, உடனடியாக பணம் புரட்டி ஜனனி அம்மாவிடம் கொடுக்கிறான்.

இதன் பிறகு நிச்சயதார்த்தம் நடக்கிறது. கல்யாண ஏற்பாடுகள் ஜரூராக போய்க் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத அந்த சம்பவம் நடக்க… திருமணம் நடந்ததா? என்பது கிளைமாக்ஸ்.

நாயகனாக டிஜே அருணாசலம். ஏற்கனவே தனுஷின் மகனாக அசுரன் படத்தில் நடித்தவர் இந்தப் படத்தின் மூலம் காதல் நாயகனாகி இருக்கிறார். காதலியின் தாயாரிடம் செருப்படி வாங்கும் இடத்தில் வெளிப்படும் ரியாக் ஷன் தேர்ந்த நடிப்பின் அடையாளம்.
அதிகம் பேசவில்லை என்றாலும், உருகி உருகி காதலிக்கும் காட்சிகளில் ஜனனி நடிப்புக்கு தாராளமாக ஜே போடலாம். ஒரு காலத்தில் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்த மந்த்ரா வுக்கு அம்மாவாக ப்ரமோஷன். மகளை ஆட்டிப் படைக்கும் அம்மாவாக சைலண்ட் மிரட்டல் நடிப்பை வழங்கியிருக்கிறார். இதுவரை காமெடி நடிகராக மட்டுமே அறியப்பட்ட கிரேன் மனோகர், இந்தப் படத்தில் அழுத்தமான அப்பா கேரக்டரில் கனமான நடிப்பை தந்திருக்கிறார். அவரது மனைவியாக செந்திகுமாரி தனது கேரக்டருக்கான நடிப்பில்
கச்சிதம்.

நாயகனின் நண்பர்களாக தங்கதுரை, ஆதித்யா கதிர், பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் பொருத்தமான பாத்திரத் தேர்வில் கதை மாந்தர்களாக உலா வருகிறார்கள். இசையமைப்பாளர் கிரண் ஜோஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் இந்தக் காதல் கதையின் ஜீவனாகி நிற்கின்றன. குறிப்பாக உசுரே உசுரே பாட்டு மனசோடு நிக்குது சாரே. ஒளிப்பதிவாளர் மார்க்கி சாயின் கேமரா கிராமத்தின் அழகை கண்களுக்குள் நிர ப்புகிறது.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எழுதி இயக்கியிருக்கிறார் நவீன் டி.கோபால். காதல் கதைக்குள் அழுத்தமாக ஒரு சஸ்பென்ஸ் வைத்து சொன்னதில் வெற்றி பெற்று இருக்கிறார்.
உசுரே, மனசுக்குள் மத்தாப்பூ.