போகி -திரை விமர்சனம்
போகி பண்டிகையின் போது தேவையில்லாத வற்றை கொளுத்துவார்கள். இந்த போகி எதை கொளுத்துகிறது என்று பார்க்கலாமா… இந்தியாவை உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மறைத்து வைக்கப்படும் கேமராவின் மூலமாக பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து ஆபாச தளங்களில் வெளியிட்டு கோடிகளில் சம்பாதிக்கிறது மலேஷியாவை சேர்ந்த ஒரு கூட்டம். இன்னும் சிலர் மர்மான முறையில் கொல்லப்படுகின்றனர்.
இந்த இரண்டு வழக்குகளையும் தீவிரமாகக் கண்காணிக்கிறது காவல்துறை. இந்தப் பிரச்சனையில் நாயகன் நபி நந்தி எப்படி உள்ளே வருகிறார் என்பது சுவாரசியத்துக்கு குறைவில்லாத திரைக் களம். படத்தின் நாயகி லப்பர் பந்து ஸ்வாசிகா இரண்டாம் பாதியில் தான் வருகிறார்.
ப்ளஸ்-2 வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றவர் மருத்துவக் கல்லூரியில் நடக்கும் அக்கிரமத்தை தட்டிக் கேட்கும் வரை ‘நாங்கல்லாம் அப்பவே இப்படித்தான்’ என்று சொல்லும் வகையில் நடிப்பை கொட்டி இருக்கிறார்.
நபி நந்திக்கும் அவரது காதலிக்குமான சிறு வயது நட்பை ப்ளாஷ்பேக்கில் உணர்வு பூர்வமாக சொல்லிய விதம் சிறப்பு. காவல்துறை உதவி ஆணையராக வேல. ராமமூர்த்தி கம்பீரம். கிளைமாக்சில் இவரது துப்பாக்கிக்கும் வேலை கொடுத்து இருக்கிறார்கள்.
கொடூர வில்லனாக மொட்டை ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியராக சங்கிலி முருகன் அனுபவ நடிப்பில் தங்கள் கேரக்டர்களில் நிற்கிறார்கள்.
இயக்கியிருக்கும் விஜயசேகரன் பெண்களின் அந்தரங்கத்தை காசாக்க செயல்படும் கதைக் கருவை மையமாகியிருக்கிறார். இது மாதிரி கதைகள் நிறைய வந்துவிட்ட
போதிலும் அண்ணன் தங்கை பாசம், அழகான காதல் என இணைத்து கதை சொன்ன விதத்தில் கரையேறி விடுகிறார்.
போகி, நெருப்பு.
