தலைநகரம் பட விமர்சனம்

‘ரைட்டாக அட்டூழியம் செய்யும் சுந்தர்.சி. பின்பு திருந்துவது போல் தலைநகரத்தின் முதல் பாகம் முடிந்திருக்கும். இரண்டாம் பாகத்திலும் அப்படித்தான் அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையாவுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் சுந்தர்.சி. ரவுடித்தனத்தை மறந்து அமைதியாக இருக்கிறார்.
ஆனால் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மூன்று பகுதிகளிலும் புதிதாக முளைத்திருக்கும் மூன்று ரவுடிகளால் இவருக்கு பிரச்சினை தேடி வர… விடுவாரா, சுந்தர்.சி.? ரவுடிகளை போட்டு புரட்டி எடுக்கிறார்.வில்லன்கள் அவரை தேவையில்லாமல் சீண்ட என்ன காரணம் என்பதை அடி தடி காரண காரியங்களுடன் விளக்குகிறது திரைக்கதை.
ஏற்கனவே முதல் பாகத்தில் ‘ரைட்’டாக வந்த சுந்தர்.சிக்கு இரண்டாம் பாகத்தில் கொலை செய்வதைத்தவிர வேறு வேலையில்லை என்பதால் அரிவாளும் ரத்தமுமாகவே இவரை காட்டி பயமுறுத்தி விடுகிறார்கள். நாயகி பாலக் லால்வானி இருக்கிறார், நடிக்க வாய்ப்பில்லாமல்..
சுந்தர்.சி.யின் தொழில் பார்ட்னராக வரும் தம்பி ராமையா போலீஸ் விசாரணையை எதிர்கொள்ளும் இடத்தில் தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார். அவரது மகளாக ஆயிரா காணாமல் போன அப்பாவை தேடித்தவிக்கும் இடத்தில் அந்த பதட்டத்தை நமக்குள்ளும் கடத்தி விடுகிறார்.
மூன்று வில்லன்களில் ஒருநிஜ சென்னை தாதாவை கண் முன் நிறுத்தி விடுகிறார், பாகுபலி பிரபாகர்.
இயக்குநர் துரை சிறப்புக் கதாபாத்திரத்தில் தோன்றி `அன்பே மனிதம்’ என சிரிக்க வைக்கிறார்.
மற்ற டான் படங்களில் இருப்பதை போலவே இந்த படத்திலும் வன்முறை இருக்கிறது. கொலைக்காட்சிகளில் கொடூரம்் தெறிக்கிறது. தார் ஊற்றி உயிருடன் கொளுத்துவது, நெஞ்சில் கத்தியை இறக்குவது இப்படி பல காட்சிகள் இதயத்தில் இடியாய் இறங்குகின்றன.படத்தில் காமெடி இல்லாத குறையை முதல்பாதியில் அறிமுகமாகும் வில்லன்களின் பிளாஷ்பேக் தீர்த்து வைத்து விடுகிறது. ரத்தம் தெறிக்கத் தெறிக்க இயக்கி இருக்கும் வி.இசட்.துரை, கதையை விட ஆயுதங்களைஅதிகம் நம்பியிருக்கிறார்.
தலை நகரம் -2 அதிரடி அட்டகாசம்..
