திரை விமர்சனம்

அழகிய கண்ணே பட விமர்சனம்

உதவி இயக்குனர் லியோ சிவக்குமாரும் சஞ்சிதா ஷெட்டியும் காதலிக்கிறார்கள். இவர்களது காதலுக்கு லியோவின் வீட்டில் ஓ.கே. சொல்ல, காதலி வீட்டிலோ எதிர்ப்பு. இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

சென்னை வரும் தம்பதிசொந்த வீடு வாங்குகிறார்கள். படம் இயக்குவதற்கான வாய்ப்பும் தேடி வருகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த அந்த குடும்பத்தை திடீரென வரும் ஒரு தொலைபேசி அழைப்பு தலைகீழாக புரட்டிப் போடுகிறது. அது என்ன? என்பது அதிரடி தடாலடி சஸ்பென்ஸ்.

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார். நாயகியாக நடித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி, குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் பொருந்திப் போகிறார். தாயான பின் இவரது நடிப்பு கூடுதல் கவனம் பெறுகிறது.

சிங்கம்புலி சிரிக்க வைக்கிறார். அமுதவாணன் மற்றும் ஆண்ட்ரூஸ் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். நாயகனின் அம்மா, தங்கை வேடத்தில் நடித்த நடிகைகள் மற்றும் சஞ்சிதா ஷெட்டியின் அப்பா, சித்தி, மாமா வேடத்தில் நடித்திருக்கும் நடிகை, நடிகர்கள் என அனைவரும் திரையில் அதிகம் பார்த்த முகங்கள் இல்லை என்றாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

நடிகர் விஜய் சேதுபதியின் சிறப்பு தோற்றமும், இயக்குநர் பிரபு சாலமனின் கதாபாத்திரமும், ராஜ்கபூரின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம்.. ஏ.ஆர்.அசோக் குமாரின் ஒளிப்பதிவு, என்.ஆர்.ரகுநந்தனின் இசை இரண்டுமே படத்தின் பிளஸ். உதவி இயக்குநரின் வாழ்க்கையை அழகான காதல் கதை மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் ஆர்.விஜயகுமார், கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும, இன்னும் கொஞ்சம் அழுத்தம் கூட்டியிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *