திரை விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு பட விமர்சனம்

அதிகமான வெளிச்சத்தில் மட்டுமே கண் பார்வை சரியாக தெரியும் நாயகன் விக்ரம் பிரபுவுக்கு, அவரது சித்தப்பா ஆனந்த் தான் எல்லாமே. சித்தப்பா கொடுக்கும் தைரியத்தில் குறை மறந்து தொழிலில் முன்னேறி வரும் நேரத்தில், எதிர்பாராத அதிர்ச்சியாக சித்தப்பா கொலை செய்யப்பட…

சித்தப்பாவை கொன்றது பிரபல அரசியல் ரவுடி என்பதை கண்டுபிடிக்கும் விக்ரம் பிரபு, அதன்பிறகு நடத்தும் அதிரடித் தாண்டவமே படம்.

வழக்கமான பாணியில் இருந்து விலகி அதிரடிக் களத்தில் அதகளம் செய்திருக்கிறார், விக்ரம் பிரபு. சண்டைக் காட்சிகளில் சகட்டுமேனிக்கு விளாசும் இந்த நடிப்பு நிச்சயம் அவருக்கு புதுசு.

வாணி போஜன் வழக்கமான நாயகி. வில்லனாக நடித்திருக்கும் டாலி தனஞ்ஜெயா, பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய கொடூரனாக பயமுறுத்துகிறார்.

நண்பன் வேடத்தில் விவேக் பிரசன்னா, பாசமிகு சித்தப்பாவாக ஆனந்த், மக்களுக்கு உதவும் நல்ல அரசியல் தாதாவாக வேல.ராமமூர்த்தி மனதில் நிற்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் மிரட்டல். நாயகனின் பார்வைக் குறைபாட்டை பார்வையாளர்கள் உணரும் விதத்தில் காட்சிப்படுத்திய விதத்துக்கே இவரது கேமராவுக்கு சல்யூட் வைக்கலாம். சண்டைப்பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் வேகமாகவும், வித்தியாசமாகவும் காட்சிப்படுத்தி தன்பங்குக்கு மிரட்டியிருக்கிறார்.

சாகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுகம். பரம சுகம். நாயகனின் பார்வைக் குறைபாடு, ஒளிப்பதிவு மற்றும் சண்டைக்காட்சிகள் மீது சிறப்பு கவனம் செலுத்திய இயக்குநர் கார்த்திக் அத்வைத், அப்படியே திரைக்கதை மீதும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் ஒளியின் பாய்ச்சல் இன்னமும் அதிகரித்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *