‘பழகிய நாட்கள்‘ திரைப்படம்… இது காதலர் தினக் கொண்டாட்டம்!

சினி நிகழ்வுகள்
காதலை மையமாக வைத்து தமிழில் இதுவரை பல திரைப்படங்கள் வந்துள்ளன! அந்த வரிசையில், இந்த படம் காதலின் குணாதிசயங்களையும் காதல் வயப்படும் ஜோடிகளின் மனப்போக்கையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறது!

இளவயது காதல், முதிர்ந்த வயது காதல் என இரு வகை காதல் பற்றியும் இயக்குநர் ராம்தேவ் யதார்த்தமாகவும் இயல்பாகவும், ஒரு காதல் ஜோடியை மையமாக திரைக்கதையில் அமர்த்தி, சுவைபட, துளி கூட விரசமின்றி ஒரு காதலர் தின பரிசாக பழகிய நாட்கள் கதையை வழங்கியுள்ளார்!

இந்த படத்தின் போஸ்டர்களில் ஹீரோவும் ஹீரோயினும் ஒரே டிரெஸ் போட்டிருந்தது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது!

இந்த படத்தில் காதலர்களாக பாராட்டும்படி நடித்துள்ள மீரான் – மேக்னா இளம் ஜோடி புதுமுக அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு இயக்குநர் ஸ்ரீநாத், சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், நெல்லை சிவா, மங்கி ரவி , வின்சென்ட் ராய், சிவகுமார், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

செந்தில் கணேஷ் ஒரு பாடலைப் பாடி நடனமும் ஆடியுள்ளார்!

படம் பற்றி இயக்குநர் கூறியதாவது… ”காதலர் தினத்தையொட்டி ரிலீஸாகிற இந்த படம் நிச்சயம் இளைய தலைமுறையை தியேட்டருக்கு சுண்டி இழுக்கும்! காலேஜெல்லாம் திறக்கப்படுகிற, தியேட்டர்கள்ல 100 % இருக்கைகளில் அமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில இந்த படத்துக்கு இளைய தலைமுறை ரொம்பவே ஆர்வமா வருவாங்க.

ஏற்கனவே காதல் வசப்பட்டிருக்கிறவங்களும் காதலுக்குள்ள விழற வயசுல இருக்குறவங்களும் நிச்சயமாக இந்த படத்தை பார்த்து ரசிப்பாங்கன்னு என்னால உறுதியா சொல்ல முடியும்! என்னைப் பொறுத்தவரை வர்ற பிப்ரவரி 12-ம் தேதி ரிலீஸாகிற இந்த படம் காதலர் தின அன்பளிப்புன்னுதான் சொல்வேன்” என்றார்.

திரைப்படத்தின் முற்பகுதி காதல் காட்சிகளை மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிற்பகுதி காதல் காட்சிகளை பிலிப் விஜயகுமார் தனது காமெராவினால் பதிவு செய்துள்ளார்.

கபிலனும் இந்த படத்தின் இயக்குனரும் பாடல்களை எழுதியுள்ளனர்.

ஜான் A . அலெக்சிஸ், ஷேக் மீரா மற்றும் மனிதன் ஆகிய மூவரும் இசையமைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *