கபடதாரி சினிமா விமர்சனம்

மேம்பாலப் பணிகளுக்காக ஒரு இடத்தை தோண்டும்போது, மூன்று பேரின் எலும்புக் கூடுகள் கிடைக்கிறது.
அவர்கள் யார் என விசாரணையை முடுக்கிவிடுகிற போலீஸுக்கு கிடைக்கிறது அடுக்கடுக்கான ஷாக்! பார்க்கிற நமக்கு கிடைக்கிறது பரபரப்புக்குப் பஞ்சமில்லாத கதை, விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதை!
கன்னடத்தில் பெரியளவில் ஹிட்டடித்த ‘கவலுதாரி’ படத்தை தமிழில் கபடதாரி’யாக்கியிருப்பவர் இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி.
கிரைம் பிரிவில் பணியாற்றும் ஆர்வமும் அதற்கு வாய்ப்பில்லாமல் டிராபிக் போலீஸாக இருந்து கொண்டே மர்மக் கொலை வழக்கை தோண்டித் துருவுகிற கதாபாத்திரத்தில் சிபி சத்யராஜ். அவரது உயரமும், வாட்டசாட்ட உடல்வாகும் போலீஸ் கதாபாத்திரத்துக்கு நல்ல பொருத்தம்!
நாயகி நந்திதா ஸ்வேதாவுக்கான காட்சிகளும் குறைவு, நடிப்புப் பங்களிப்புக்கான வாய்ப்பும் குறைவு. வருகிற காட்சிகளில் பங்களிப்பு நிறைவு!
ஜெயப்பிரகாஷின் நடிப்பு பெரிதாய் ஈர்க்கிறது. நாசரின் நடிப்பில் வழக்கம்போல் அழுத்தம்!
சம்பத் மைத்ரேயாவின் வில்லனம் படத்தின் பலம். கன்னட ‘கவலுதாரி’யில் வில்லனாக வந்தவரும் இவரே!
நடிகையாக வருகிற சுமன் ரங்கநாதன், சாய் தீனா, ஜே.சதீஷ்குமார், படத் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவரவர் பாத்திரங்களில் கச்சிதம்!
படத்தின் ஹீரோ தீப்பிடித்தது போன்ற வேகத்தில் அமைந்த திரைக்கதை. இரண்டாவது ஹீரோ சைமன் கே.கிங்கின் பின்னணி இசை!
காதல் கசமுசா, டூயட் பாட்டுக்காக ஃபாரீன் விசா என்று மசாலா சேர்க்காமலிருந்ததற்காக இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டு!
காட்சிகளின் அழகுக்கு அழகு சேர்க்கிறது ராசாமதியின் ஒளிப்பதிவு!
லாஜிக் ஓட்டைகளை ஸ்கேன் செய்யும் மூளை உங்களிடம் இருந்தால் அதை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டுப் பாருங்கள், திருப்தியான கிரைம் திரில்லர் அனுபவம் நிச்சயம்!
