பேய் இருக்க பயமேன் சினிமா விமர்சனம்
அந்த இளம் ஜோடி தங்களுக்குத் திருமணம் முடிந்ததும், ஒரு பெரிய பங்களாவுக்குள் குடியேறுகிறார்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. அதனால் சின்னச் சின்ன சண்டை. தனித்தனி அறைகளில் தங்குகிறார்கள்.
அந்த பங்களாவுக்குள் நுழைந்ததில் இருந்தே பேய்களின் அட்டகாசம்; பயப்படுகிறார்கள். பேய்களால் இவர்களுடைய நிம்மதி பறிபோகிறது. பேய் ஓட்டுகிற சிலரைக் கூட்டிவர, பேய்கள் அவர்களைத் தெறிக்கவிடுகிறது.
வெறுத்துப் போன அந்த இளம் ஜோடி, தாங்களே பேய்களை விரட்டும் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அந்த முயற்சிகள் கலகலப்புக்கு கேரண்டி தருகின்றன.
பேய்ப் படங்களுக்கே உரிய அரதப் பழசான காட்சிகளால் படத்தின் முன்பாதி நிறைந்திருந்தாலும், பின்பாதியில் கதையோட்டத்தை சற்றே வித்தியாசமான கோணத்தில் நகர்த்தியிருப்பதற்காக இயக்குநர் கார்த்தீஸ்வரனுக்கு அழுத்தமான கை குலுக்கல்!
இயக்குநரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவரது அப்பாவித் தோற்றமும் அசட்டுத்தனம் சுமந்த காமெடியும் கவர்கிறது.
பளபள தேகம், பளீர் சிரிப்பு என ஈர்க்கிறார் நாயகி காயத்ரி ரெமா. அம்மணிக்கு காமெடியும் வருகிறது, உடம்பின் செழுமையைக் காட்ட பாடல் காட்சியொன்றும் வருகிறது!
படத்தின் 90 % காட்சிகள் ஒரே வீட்டுக்குள் நடக்கிறது. படம் முழுக்க ஹீரோவையும் ஹீரோயினையுமே பார்த்துக் கொண்டிருக்கும்படி திரைக்கதை. அந்த முகங்கள் சலிப்பு தரவில்லை என்பது படத்தின் பலம்!
பேய்களாக வருகிற அர்ஜுன் – நியத்தி ஜோடியின் நடிப்பு நிறைவு! முத்துக்காளை வருகிற காட்சிகள் லகலக!
பின்னணி இசையால் காட்சிகளுக்கு ஊக்கமருந்து செலுத்தியிருக்கிறார் ஜோஸ் பிராங்க்ளின். சூடான காட்சிகளுடன் ஒரு காதல் பாட்டு, சைந்தவி குரலில் வழிகிறது இனிமை!
ஒளிப்பதிவாளரின் உழைப்பு ஜோர். படத்தின் முன்பாதி சலிப்பு.
இன்டர்வல் வரை பொறுமை காத்தால் பின்பாதியை ரசிக்கலாம்!