சினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்

தியேட்டர்களில் 100% மக்களை அனுமதிக்க வேண்டும்! -‘தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை!

தியேட்டர்களில் 100% மக்களை அனுமதிக்க வேண்டும்! -‘தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 28.12.2020 இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சருக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட கடிதத்தை வெளியிட்டனர்.

‘தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சமர்ப்பிக்கும் கோரிக்கை விண்ணப்பம்’ என்ற தலைப்பில் விடுக்கப் பட்டிருக்கும் அந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் இதோ:-

எங்களது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் பொன்னான ஆட்சியில் தமிழ்த் திரையுலகம் நல்ல வளர்ச்சி நிலைமைக்கு வரும் என்பதில் ஐயமில்லை.

தற்போதுள்ள தற்போதுள்ள சூழ்நிலையில் திரையரங்குகளை நடத்துவதே மிகவும் சிரமமாக உள்ள இந்தச் சூழ்நிலையில், அமேசான் நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்களின் மூலம் புதிய திரைப்படங்களை திரையிடுவதால் திரையரங்குகளின் வசூல் குறைந்தது மட்டுமல்லாமல், பொதுமக்கள் வருகையும் குறைந்துள்ளது. கொரோனால் வசூல் பாதிப்பு காரணமாக பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டது. ஆகவே தாங்கள் அன்புகூர்ந்து எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

*கோரிக்கைகள்*

1. தற்போது திரையரங்குகளில் 50% மக்கள் அனுமதிப்பதற்கு பதிலாக 100% மக்களை அனுமதிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

2. திரையரங்குகளால் கொரோனா பரவியதற்கான எந்தவித அத்தாட்சிகளும் இல்லை. ஆகவே 100% பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

3. தற்போதுள்ள சூழ்நிலையில் 12% மற்றும் 18%வரியுடன் 8% உள்ளாட்சி வரி சேரும்போது வரிப் பளுவினால் திரையரங்குகள் நடத்த முடியாத சூழ்நிலை. ஆகவே, பொதுமக்கள் வருவதற்கு 8% வரி உயர்வை நீக்கினால் மக்கள் வருகை அதிகரிக்கும்.

4. திரையரங்குகளின் உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிப்பது என்றிருப்பதை மூன்று ஆண்டுகளாக மாற்றி தர வேண்டும்.

5. புதிய திரையரங்குகளுக்கும் ஏற்கனவே உள்ள திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாற்றுவதற்கும் பொதுப்பணித் துறையின் அனுமதி மட்டுமே போதும் என்று அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

6. தற்போது டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால், பழைய ஆபரேட்டர் லைசென்ஸ் முறையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.
.
7. திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருகை மிகவும் குறைந்துள்ளதால் பார்வையாளர் இல்லாத ஒரு சூழ்நிலையில் வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

8. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் சினிமா தியேட்டர்கள் கொரோனோவால் 8 மாதங்கள் மூடப்பட்டதால், அந்த பாதிப்பிலிருந்து சினிமா தொழிலை மீட்க அந்த மாநில அரசுகள் சில சலுகைகளை அறிவித்துள்ளது.

1. ரூ10 கோடிக்குள் தயாராகும் படங்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்று அறிவித்துள்ளது.

2. தியேட்டர்களில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3. மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி வழங்கியுள்ளது.

4. நகரங்கள் புற நகர்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் உதவியும், கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ 5 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு, இந்த கடன்களுக்கு வட்டி இல்லை என்று அரசு அறிவித்திருக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் தமிழக அரசு நமது மாநிலத்தில் உள்ள தியேட்டர்களுக்கும் மேற்கண்ட சலுகைகளை வழங்க வேண்டும்.

தாங்கள் தாயுள்ளத்துடன் எங்களின் கோரிக்கைகளை ஏற்று எங்கள் திரையரங்குகளை காப்பாற்றுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

-பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *