நெக்ஸ்ட் ‘டோர் இளைஞனின் கார் காதல்
பொதுவாகவே திரைக்கதைகளை வாசிப்பது திரைக்கதை எழுத விரும்புவர்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். ஆனால் ஆங்கில படங்களின் திரைக்கதைகள் வாசிக்க கிடைப்பது போல தமிழ் படங்களின் திரைக்கதைகள் கிடைப்பதில்லை. திரைக்கதைகளை வெளியிடுவதும் அல்லது திரைக்கதை வடிவத்தில் கதைகளை வெளியிடுவதும் எப்போதாவது தான் தமிழில் நிகழ்கிறது.
திரைக்கதை வடிவம் என்றதும், காட்சிகளுக்கு தலைப்பிட்டு வசனங்களை மட்டும் எழுதிவிடவில்லை.
படப்பிடிப்பிற்கு ஏற்ற ஒரு முழு நீள திரைக்கதை வடிவமாக இந்த கதை இருக்கிறது என்பதே கார் காதலின் சிறப்பு.
பரிச்சயமான மனிதர்களை பற்றிய கதைகளை சுவாரஸ்யமாக்கும் பொறுப்பு காட்சிகளுக்கு உண்டு. காட்சிகள் தான் ஒரு திரைக்கதையின் பலத்தை நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் கார் காதலில், காட்சிகள் கட்சிதமாகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்திருக்கின்றன.
ராம் என்ற நெக்ஸ்ட் ‘டோர் இளைஞனின்’ காதல் நினைவுகளை சொல்லும் கதையாக மட்டும் நின்றுவிடாமல், அவனுடைய காதல் பயணத்தில் அவனுக்கு கிட்டும் வாழ்க்கை பாடத்தைப் பற்றியும் கதை பேசுகிறது. குறிப்பாக, ராமிற்கும் டாக்டர் விட்டலுக்கும் இடையேயான உறவு மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது. இந்த கதை சினிமாவாக மாறும் போது அந்த உறவு மனதிற்கு இன்னும் நெருங்கி வரும்.
ஒரு சுவாரஸ்யமான காதல் கதை படிக்க விரும்புவர்களை ஏமாற்றாத கதையாகவும், திரைக்கதை பயிற்சிக்காக ஒரு முழு நீள தமிழ் திரைக்கதையை வாசிக்க விரும்புவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய திரைக்கதையாகவும் இது இருக்கும்.