சினிமா செய்திகள்நடிகர்கள்

ஆக்டர் சத்யராஜ் ஃபீல்டுக்கு வந்து 42 வருசமாச்சு

ஆக்டர் சத்யராஜ் ஃபீல்டுக்கு வந்து 42 வருசமாச்சு-ன்னு ஒரு ஹேஷ்டேக் போட்டு சொல்லி இருக்கார் அவர் மகன் சிபிராஜ்.. கொஞ்ச ஆர்வகோளாரான சிபி முன்னர் இது மாதிரி சத்யராஜ் நடிச்ச கட்டப்பா கேரக்டர் மெழுகு சிலையா உருவாகுது-ன்னு நியூஸ் போட்டு களேபரம் பண்ணியதால் அது குறிச்சு விசாரிக்கும்படி நம்ம கட்டிங் கண்ணையா-கிட்டே சொன்னோம்,

அவர் அனுப்பியிருக்கும் சேதி இதோ:

சின்ன வயசிலிருந்தே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து வந்த சத்யராஜ், ‘அன்னக்கிளி’ படப்பிடிப்பை நேரில் கண்டார். அப்போது, அதன் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் திருப்பூர் மணியன் அவர்களுக்கு கொடுக்கும் ராஜ மரியாதையை நேரில் கண்ட அவர், திரையுலகில் நுழைய வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார். அதையொட்டி கோமல் சத்தியநாதன் நாடகக் குழுவில் சேர்ந்த அவர், ‘கோடுகள் இல்லாத கோலங்கள்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அக்கதாபாத்திரம் பெரிதளவு பேசப்படாததால், ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ என்ற பல்வேறு படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும், அவ்வப்போது ஒரு சில வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

இப்படி புரொடக்‌ஷன் மேனேஜரா இருந்தப்போதுதான் டி.என்.பாலு டைரக்ட் செய்த “சட்டம் என் கையில்” படத்தில் கமலஹாசனுக்கு வில்லன் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார்.அந்த படம் ரிலீஸாகிதான் இன்னியோட 42 வருசமாகுது

இந்த முதல் படத்தில் அறிமுகமானது குறித்து சத்யராஜ் -கிட்டே கேட்டப் போது சொன்னது இதோ:-

“டைரக்டர் டி.என்.பாலு என்னைப் பார்த்த பார்வையில் நான் வில்லனாக தெரிந்திருக்கிறேன். மறுநாள் நான் அவரை சந்தித்தபோது, ”விக்கி என்றொரு வில்லன் கேரக்டர் இருக்கிறது. சின்ன கேரக்டர்தான். பண்ணுங்கள்” அப்படீன்னார். நானும் எப்படியாவது இப்படியாவது நடிக்கும் நேரத்துக்காகத்தான் காத்திருந்தேன். முதல் நாள் எனக்கு டயலாக் எதுவும் இல்லை. மலையில் இருந்து ஓடிவருகிற மாதிரி எடுத்தார்கள்.

இந்தப்படத்தில் டைரக்டர் எனக்கு கொடுத்த முதல் வசனம் “எனக்கு இப்ப நேரம் நல்லா இருக்கு.”

வில்லனுக்குப் போய் இப்படியொரு டயலாக்கா என்று உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். கதைப்படி, நான் செய்கிற கொலைக்கு கதாநாயகன் மாட்டிக் கொள்வார். அதனால், “இப்ப எனக்கு நேரம் நல்லா இருக்கு. அதனால்தான் நான் செய்த கொலைக்கு அவன் மாட்டிக்கிட்டான்” என்ற வசனத்தை தந்து பேசச் சொன்னார்கள்.

ஏற்கனவே டைரக்டர் டி.என்.பாலு என்னிடம், “பைட் தெரியுமா?” என்று கேட்டபோது, எங்கே சான்ஸ் போயிடுமோன்ன்னு “தெரியும்” என்று சொல்லிட்டேன். நடிக்க வந்த மூன்றாவது நாளே சென்னை வளசரவாக்கத்தில் இருந்த `ஜெய்’ தோட்டத்தில் சண்டைக்காட்சி எடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதே எனக்கு உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. நமக்குத்தான் `சினிமா பைட்’ தெரியாதே!

அதனால், ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா சங்கரை சந்தித்து உண்மையை சொல்லி விட்டேன். அவரும் பெருந்தன்மையுடன் தனது அசிஸ்டெண்ட் கூட மெரினா பீச்சுக்கு அனுப்பி வைத்தார். அந்த உதவியாளர் எனக்கு பீச் மணலில் `சினிமா பைட்’ கற்றுக் கொடுத்தார். அதாவது கதாநாயகனிடம் அடி வாங்குவது போல் நடிக்கும்போது அடிவாங்காமல் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்! அப்போதுதான், ஸ்டண்ட் காட்சியில் `டைமிங்’ எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

மறுநாள் படப்பிடிப்பில் கமல் சாருடன் சண்டைக்காட்சி. முந்தின நாள் பெற்ற பயிற்சி உதவியாக இருந்தது.

பொதுவாக, சண்டைக் காட்சியின்போது `வாட்ச்’ போட்டு நடிக்க மாட்டார்களாம். அது எனக்குத் தெரியாது. சண்டைக்காட்சி முடிந்த நேரத்தில், நான் போட்டிருந்த 600 ரூபாய் வாட்ச் உடைந்து போய்விட்டது! கமல் சார் இதைப்பார்த்ததும் `அடடா! உங்களிடம் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கம்பெனி வாட்சை போட்டுக்கொண்டு சண்டைக்காட்சியில் நடித்திருக்கலாமே” என்றார்.

இப்படி 600 ரூபாய் வாட்சை உடைத்துவிட்டு, நடிப்புக்கு 500 ரூபாய் `செக்’ வாங்கினேன். 1975 வாக்கில் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. அந்த செக்குக்காக பாங்கியில் கணக்கு ஆரம்பித்தேன். முதல் சம்பளத்தில் அம்மா, சின்னம்மாவுடன் என் 5 தங்கைகளான கல்பனா, ரூபா, நந்தினி, அகிலா, அபராஜிதா ஆகியோருக்கும் புடவைகள் எடுத்துக் கொடுத்தேன்.

முதல் படமே நூறாவது நாள் கண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. இந்த விழாவை சென்னை நிïஉட்லண்ட்ஸ் ஓட்டலில் கொண்டாடினார்கள். கலைஞர் தலைமை தாங்கி விருதுகள் வழங்கினார். எனக்கும் கேடயம் கிடைத்தது.இதற்கிடையே, தயாரிப்புத் துறையில் நான் பணியாற்றிய “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படம் ரிலீஸ் ஆயிற்று. இந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடிச்சும் இருந்தேன். அதனால் டைட்டில் கார்டில் நடிகர்கள் பட்டியலில் `நடிகர் சத்யராஜ்’ என்று வரும். டெக்னிஷியன் பட்டியலில் அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ரெங்கராஜ் பி.எஸ்.சி. என்று வரும்.

பெற்றோர் எனக்கு வைத்த பெயர் ரெங்கராஜ்தான். சினிமாவில் அறிமுகமாகும் போது, எனக்கு நானாக வைத்துக்கொண்ட பெயர்தான் சத்யராஜ். அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் மகன் பெயர் சத்யன். (இப்போது சத்யனும் நடிகராகி விட்டார்) அந்த `சத்ய’னில் இருந்து `சத்ய’வையும் ரெங்கராஜில் இருந்து `ராஜை’யும் எடுத்துக்கொண்டு சத்யராஜ் ஆகிவிட்டேன்!

நடிகனாக சத்யராஜ் என்றிருந்தாலும், அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ஒரிஜினல் பெயரை கல்வித் தகுதியுடன் போட விரும்பினேன்.இப்படி ஒரு படத்தில் 2 பெயரில் தனித்தனி பிரிவில் பெயர் வந்தது அனேகமாக எனக்கு மட்டும்தான் இருக்கும். (கட்டிங் கண்ணையா)

“சட்டம் என் கையில்” படம் நன்றாக ஓடியும், தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரலை. நடிகர் சிவகுமார் சிபாரிசில் “முதல் இரவு”, “ஏணிப்படிகள்” போன்ற படங்கள் கிடைத்தன. டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் தனது “காதலித்துப்பார்” என்ற படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

“முதல் இரவு” படத்தை தயாரித்த கோவை செழியன் எனக்கு தூரத்து உறவினர். ஆனாலும் நடிகர் சிவகுமார் அண்ணன்தான் என்னை படக்கம்பெனிக்கு அழைத்துச் சென்று வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இதெல்லாம், திருப்பூர் மணி ஆபீசில் தங்கிக்கொண்டு, தயாரிப்பு வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தபோது நடந்தது.

டைரக்டர் பி.மாதவன் அப்போது “தங்கப்பதக்கம்”, “வியட்நாம் வீடு” என்று சிவாஜி படங்களை இயக்கி, பெரிய பெயரோடு இருந்தார். அவர் சிவகுமார் – ஷோபா நடித்த “ஏணிப்படிகள்” படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர் சிவகுமார் அண்ணன் உபயத்தில் ஷோபாவின் அண்ணன் வேடம் எனக்கு கிடைத்தது. அதுவரை நான் நடித்த படங்களில், என்னை `பளிச்’சென்று வெளிப்படுத்திய படம் இதுதான்.

என்றாலும், இந்தப்படத்தில் நடித்த போது இன்னொரு காரியமும் செய்தேன். படத்தின் வில்லன் ஜெய்கணேஷின் “பைக்” சேஸிங் காட்சியில், அவருக்கு நான் `டூப்’ ஆக நடித்தேன். ஏற்கனவே கார் ஓட்டிய அனுபவம் எனக்கு இருந்ததால், இந்த `பைக்’ சேஸிங் சிறப்பாக அமைந்தது.

ஆக நான் பல போராட்டங்களைக் கடந்துதான் நடிகனானேன். வந்த பிறகும் கிடைத்ததோ வில்லத்தனமான வேடங்களே. அதிலும் `கொஞ்ச நேர’ வில்லன்தான் அதிகம்.`இப்படியான கேரக்டர்களில் நடிக்கத்தான் சினிமா சினிமா என்று அலைந்தாயா!’ என்று என்னிடம் உறவினர்கள் வருத்தத்துடன் சொன்னதும் அதை பொருட்படுத்தாம தொடர்ந்தால் இன்னிக்கும் பலரால் நினைவு கூர்வதும் மகிழ்ச்சி’ அப்படீன்னார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *