வியப்பில் ஆழ்த்திய நடிகர்
கொரோனா ஊரடங்கால் திரைப்படத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றிவருகிற ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு,நடிகர் ஸ்ரீமன் சந்தடியில்லாமல் உதவிவருகிறார்.
நடிகர் ஸ்ரீமனிடம் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வாங்கி வந்ததாகச் சொன்ன ஒருவர் கூடுதல் தகவலாக இந்த உதவியை அவர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்தே எந்தவித பப்ளிசிட்டியும் இல்லாமல் செய்து வருவதாகச் சொன்னார்.
நண்பரிடம் பேசி முடித்ததும் ஸ்ரீமனுக்கு செல் பேசினோம்.
‘மாஸ்டர்’ படத்துக்காக கொரோனாவுக்கு முன்பே டப்பிங் பேசி முடித்துவிட்டதாகவும் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் சொன்னவரிடம் ஊரடங்கு காலத்தில் செய்த உதவி குறித்து கேட்டோம்.
‘‘கொரோனா சமயத்தில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று என்னுடைய குடும்பத்திடம் தெரிவித்ததும் என்னுடைய அப்பா, அம்மா, மனைவி ஆகியோர் தங்களிடம் இருந்த சேமிப்புப் பணத்தைக் கொடுத்தார்கள். தவிர, என்னுடைய நண்பர்கள் சிலர் உதவி செய்தார்கள். மளிகைப் பொருட்களை லாப நோக்கமில்லாமல் ‘கிரேஸ் சூப்பர் மார்க்கெட்’ ராஜ்குமார் சார் பர்சேஸிங் ரேட்டுக்கே கொடுத்தார். வி.பி.ஆர்.என்ற தொண்டு நிறுவனம் 140 நபர்களுக்கு 10 கிலோ அரிசி பை கொடுத்தார்கள்.
அந்த வகையில் இதுவரை குடும்பத்தினர் கொடுத்த ஆதரவால் உதவி செய்ய முடிந்தது. லாக்-டவுன் முடியும் தறுவாயில் உதவி கேட்டு நிறைய பேர் வருகிறார்கள். அதுதான் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. தொடர்ந்து உதவி செய்ய ஆண்டவன் அருள்புரிவான் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றார் நடிகர் ஸ்ரீமன்.