வீரபாண்டிய கட்டபொம்மன் ரிலீஸாகி இன்னியோட 61 வருஷமாச்சு
பிரமாண்டமாய் ஏகப்பட்ட துணை நடிகர்கள் பங்களிப்புடன் கேவா எனப்படும் டெக்னிக் கலரில் வந்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமைக்குரிய ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஜெய்ப்பூரில் எடுக்கப் பட்டுச்சாக்கும். சிவாஜி கணேசனின் இல்லமான அன்னை இல்லத்தில் அக்டோபர் 1957 இல் ஒரு பூஜையுடன் தொடங்கியது. 1958 ஆம் ஆண்டில் மெட்ராஸில் பரணி ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பின் போது, அடூர் கோபாலகிருஷ்ணன் (ஒரு நாள் பிற்பகல் படப்பிடிப்பைப் பார்த்தவர்) செட்டில் கடுமையான வெப்பம் இருந்ததால் ஒவ்வொரு டேக்கிற்கும் பிறகு வெளியே ஓடிவந்த நடிகர்களை நினைவு கூர்ந்தார். அதாவது பரணி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தபோது, விளக்கு வெளிச்சத்தின் வெப்பம் தாங்காமல் பல துணை நடிகர்கள் அழுது புலம்பினார்களாம். அவர்களது கேரக்டர் என்ன தெரியுமா? ‘வெற்றிவேல் வீரவேல்’ என்று முழங்கியபடி எதிரிகளைப் பந்தாடும் படைவீரர்கள்.
அப்படி 1957ல் தொடங்கப்பட்ட படம் 1959ல் திரையைத் தொட்டிருக்கிறது. 16.5.59ல் தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு முன்னர், இந்தப் படத்தின் பிரீமியர் காட்சி லண்டனில் திரையிடப்பட்டது. நம் நாட்டின் முதல் வெளிநாட்டுப் பெண் தூதுவரும் நேருவின் சகோதரியுமான விஜயலட்சுமி பண்டிட், அந்த விழாவுக்குத் தலைமையேற்று சிறப்பித்தார்.1960 ஆம் ஆண்டு எகிப்து தலைநகரம் கெய்ரோவில் நடந்த ஆசிய – ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவில் ‘ஆசியாவின் சிறந்த நடிகர்’ என்ற பட்டம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என்ற அடிப்படையிலும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ விருதுகளை அள்ளினான். அந்தவகையில் இரண்டு பெரிய கண்டங்கள் கலந்து கொண்ட போட்டியில் வென்ற முதல் தமிழ்ப்படம், முதல் இந்தியப்படம் மற்றும் முதல் ஆசியப்படம் என்கிற பெருமையும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்குக் கிடைத்தது.(கட்டிங் கண்ணையா)
இது பற்றி முன்னொரு முறை ஃபிலிம் நியூஸ் ஆனந்தனிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னது இது : சிவாஜிகணேசனும் கதை வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமியும் ஒரு பயணத்தின்போது கயத்தாறு வழியாகப் போயிருக்காங்க. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அந்த இடத்தைப் பற்றி பேச்சு வந்தபோது, ‘வேரபாண்டிய கட்டபொம்மன் கதையை நாடகமாகப் போடலாமே’ அப்படீன்னு யதார்த்தம சொல்லியிருக்கிறார் சிவாஜி. ‘ஓ.. பேஷ்.. பேஷ்.. அப்படியே செய்வோம்’ என்று ஆமோதித்த சக்தி கிருஷ்ணசாமி ஒரே மாசத்தில் கதை,வசனத்தை எழுதி முடித்திருக்கிறார். முதல் நாடகம் சேலத்தில் அரங்கேறியது. 50 ஆயிரம் செட்டுகளுடன் பிரமாண்டமாக நடத்தப்பட்ட நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு திரைப்படமாக வெளிவருவதற்குமுன் 100 முறை நாடகமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்தபிறகும் 12 முறை மேடையேறியது. நாடக வசூலின் மூலம் கிடைத்த முப்பத்து இரண்டு லட்ச ரூபாயை பள்ளி, கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து உதவியிருக்கிறார் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.
பின்னர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு ஒரு யானையை காணிக்கையாக வழங்கினார் சிவாஜி கணேசன். அதற்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் நடித்த பத்மினியின் ‘வெள்ளையம்மா’ கதாபாத்திரப் பெயரையே சூட்டினார்.
1984ஆம் ஆண்டில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை மறுவெளியீடு செய்தார்கள். அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் வரிவிலக்கு அளித்து, படத்தின் வெற்றிக்கும் வசூலுக்கும் வழியமைத்திருக்கிறார்.