சினி நிகழ்வுகள்

ஐசரிவேலைன் – நினைவஞ்சலி

இன்றைக்கு கல்வித் தந்தையாகவும், நடிகர் சங்க காப்பாளர்களில் ஒருவர் என்று சொல்லிக் கொள்பவருமான ஐசரி கணேஷ் தந்தைதான் ஐசரி வேலன். அவர்
நடிக்க வருவதற்கு முன் மெட்டல் பாக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தார்.பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக குமாஸ்தாகவும் வேலை செய்துள்ளார். இவ்வேலைகளில் விருப்பமில்லாமல் கலையார்வம் காரணமாக நாடக மாமணி எம்.எஸ்.முத்துகிருஷ்ணன், யாதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை ஆகியோருடைய நாடகக் கம்பெனியில் மாணவனாக இணைந்தார். சுமார் 50 நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துப் பயிற்சி பெற்ற கதிர்வேலன், தானே தனித்து நாடகங்கள் எழுதவும் தயாரானார்.

விருதை ராமசாமி எழுதிய ‘எங்குமே எதிர்ப்பு’ என்ற நாடகத்தில் 1956-ஆம் ஆண்டில் சென்னை, விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடித்தார். நகைச்சுவை மாமணி ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் இந்நாடகத்தைத் தலைமையேற்று நடத்தினார். நாடகத்தை ரசித்துப் பார்த்து சிரித்து மகிழ்ந்த ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் “ அது சரி, “ அது சரி” என்று குறுக்குப் பேச்சை நாடகம் முழுவதும் தூவி நாடக வெற்றிக்குக் காரணமாயிருந்த ‘ஐசரி வேலனை’ அழைத்து உன் பெயர் என்ன? என்று கேட்க கதிர்வேலன் என்று இவர் கூற, ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் தனக்கே உரிய பாணியில் மேடையில் சிரித்தவாறு “ அது சரி “ வேலன் என்று கதிர்வேலனைக் குறிப்பிட்டார். இந்த ஒரே நாடகத்தில் அவரது பெயர் “ அது சரி “ வேலன் என்று மாறியது. “ அது சரி “ வேலன் குறுகிய காலத்திற்குள் குறுகி மருவி “ ஐசரி “ வேலன் ” என்றாகிவிட்டது. தமிழ் சினிமாவுக்குள் நுழைய கதிர் வேலன் ஐசரி வேலனாக நுழைய காலம் கனிந்துவிட்டது.

நடிகர் அசோகன் இவரது நாடகங்களைப் பார்வையிட வருவார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட நடிகர் அசோகனே படத்தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்து சினிமாவுக்குள் பிரவேசிக்கச் செய்தார். ’ஐந்து லட்சம்’ படத்தில் அறிமுகமானார். எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்றவர் ஐசரி வேலன். எம்.ஜி.ஆரும் தான் நடித்த பல படங்களில் ஐசரி வேலனுக்கு வாய்ப்பளித்தார். எம்.ஜி.ஆர் ஆட்சியமைத்த பின்னரும் இரானுவ வீரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 25 படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் அதிகமாக வேரூன்றாது போனவர். காரணம் அவருக்கு அமைந்த கதாபாத்திரங்கள் ‘லாயிஸ்டிக்’ காமெடியாக இருந்ததுதான்.

வசனத்தை உச்சரிப்பதில் தனிக்கவனம் காட்டிய இவருடைய நாடகத்தை நடிகர் அசோகன் பார்க்க வந்த வேளை – சினிமாவில் நுழைந்தார் ஐசரி.

‘ஐந்து லட்சம்’ படத்தில் அறிமுகம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மீது மிகவும் அன்பு காட்டிய ஐசரிவேலனுக்கு அவருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. உருவாக்கிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

1971ல் வெளிவந்த ‘ரிக் ஷாக் காரன்’ படத்தில் நடித்ததும் அடுத்தடுத்து நகைச்சுவை வேடங்கள். இதயவீணை, உழைக்கும் கரங்கள், நேற்று இன்று நாளை, பல்லாண்டு வாழ்க, இதயக்கனி, நீதிக்குத் தலைவணங்கு, நவரத்தினம் என்று பல படங்களில் நடித்த ஐசரி வேலன் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’.

ராணுவவீரன் படத்தில் ரஜினியுடனும், சிம்லா ஸ்பெஷல் படத்தில் கமலுடனும் சேர்ந்து சுமார் 25 படங்களில் நடித்திருக்கிற ஐசரிவேலனை அரசியலிலும் முன்னிறுத்தினார் எம்.ஜி.ஆர்.

சென்னையில் தற்போது மிகவும் பிரபலான தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக நின்று வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார் ஐசரி. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நீண்டகால உறுப்பினர்.

நாடகத்தில் நடிப்பதை வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்தவரின் வாழ்வு விருதுநகரில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இதே நாளில் நிறைவுபெற்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *