மீண்டும் புது முகங்கலுடுன் களமிறங்கும் “ராட்டினம்” டைரக்டர் தங்கசாமி
ஒரு படத்தின் கிளைமாக்ஸ் நாம் நினைத்து பார்க்க முடியாதபடி அமைந்து விட்டால் அது தியேட்டரை விட்டு வெளியேறும் மக்களின் அல்லது நல்ல ரசிகனின் மனநிலையில் பாதிப்பை உண்டாக்குவது இயல்பு. அப்படி முற்றிலும் வேறு கோணத்தில் அதே நேரம் நடைமுறை யதார்த்தத்தை பதிவு செய்த தமிழ் படங்களை இயக்கிய இயக்குனர்களின் வரிசையில் கே.எஸ். தங்கசாமிக்கு கண்டிப்பாக ஒரு இடம் ஒதுக்க வேண்டும். அதுவும் தனது முதல் படத்திலேயே அந்த வரவேற்பை பெற்றவர் அவர். திரையுலக ஜாம்பவான்கள் பாரதிராஜா, பாக்கியராஜ் முதல் இன்றைய யுவ யுவதிகளின் இயக்குனர் கௌதம் மேனன் வரை மிகவும்
ரசித்து பாராட்டிய படமாக கே.எஸ். தங்கசாமியின் முதல் படம் அமைந்தது. இத்தனைக்கும் கே.எஸ். தங்கசாமியின் முதல் படத்தில் நடித்த அனைவரும் புதுமுகங்களே. அவர்களை கொண்டு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெறுவது சாதாரண விஷயமல்ல. “ராட்டினம்” படம் இவை இரண்டையுமே சாதித்தது. பத்திரிகைகள் “ராட்டினம்” நல்ல பொழுதுபோக்கு படம், “ஒரு நேர்மையான முயற்சி” என்று பாராட்டு மழை பொழிந்தன.
தி ஹிந்து நாளிதழ் இவ்வாறு பாராட்டியது, “Raattinam is a film that succeeds in surprising you on more occasions than just one — the biggest surprise coming right at the end, in the form of the climax. To be fair to director K. S. Thangasamy, his story may appear clichéd, but the message he communicates through his film is relatively fresh and one that makes sense”. இந்த படத்தின் வெற்றி பெரிய பட நிறுவனங்கள் சிறு பட்ஜெட் படங்களை ஆர்வமுடன் தயாரிக்கவும், வெளியிடவும் வழி அமைத்து கொடுத்ததாக டைம்ஸ் ஆப் இண்டியா பாராட்டியது, “In the small-budget films released in Tamil cinema, ‘ Raattinam’ was one of the most appreciated films by acclaimed film directors. The success of the film paved way for big companies to busy small budget films and distribute them as well.”
பொதுவாக புதுமுகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி பெற்றவுடன் அடுத்த படத்தில் ஸ்டார் நடிகர்களுக்கு படம் இயக்குவது இயல்பு. ஆனால் அடுத்த படத்திலும் தனது கொள்கையில் உறுதியாக இருந்தார் தங்கசாமி. சிறியதொரு கதையை எத்தனை அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள் என்று கைதட்டிப் பாராட்ட தோன்றும் விதத்தில் அவரின் இரண்டாவது படம் “எட்டுத்திக்கும் மதயானை” வெளிவந்து அவருக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று தந்தது. “என்னதான் எட்டுத்திக்கில் இருந்து வரும் யானைகளுக்கு மதம் பிடித்தாலும் யானை பிளிறத்தானே செய்யும்? அதை பிரமாதமாக செய்திருக்கிறது இப்படமும்” என்று தினமலர் நாளிதழ் பாராட்டியது.
இப்போது தனது அடுத்த படத்திற்கான கதை, திரைக்கதையை தயார் செய்து விட்டார் தங்கசாமி. அவரது வழக்கம் போல் புதுமுகங்களையே இந்த படத்திலும் அறிமுகப்படுத்துவது என்பதில் உறுதியாக உள்ளார். அதற்கான கதை விவாதங்கள், நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்ப விஷயங்கள் குறித்தான சந்திப்புகள் நடைப்பெற்று வந்த நிலையில் கொரோனாவின் காரணமாக சிறு தொய்வு! இருந்தாலும் இந்த நேரத்தை முழுவதுமாக பயன்படுத்தும் நோக்கில் திரைக்கதையை மேலும் மேலும் மெருகேற்றி கொண்டே இருக்கிறார். முற்றிலும் புது முகங்களே அவர் எதிர்ப்பார்ப்பது, தனது மேக்கிங் ஸ்டைலுக்கு புது முகங்களே சரியாக பொருந்துவார்கள் என்பதில் தங்கசாமிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. சினிமாவின் மேல் காதல் கொண்டவர்கள், அடங்காப் பசி கொண்டவர்கள் அவரை இப்போது அணுகலாம். புது முகங்களாக இருக்க வேண்டும் என்பது இயக்குனரின் எழுதப்படாத விதி…ஏனென்றால் இயக்குனர் தங்கசாமியை பொறுத்தவரை கதையும் திரைக்கதையும் தான் ஹீரோ, ஹீரோயின், வில்லன் மற்றும் சகலமும்!!