சினி நிகழ்வுகள்நடிகர்கள்

மைக்’ மோகன் -க்கு ஹாப்பி பர்த் டே

தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி, கமல் என்ற இரண்டு துருவங்களைத் தாண்டி தமிழ் மக்களின் கண்களில் பட்ட நாயகன். எண்பதுகளில், தயாரிப்பாளர்களுக்குப் பிடித்த ஹீரோ என்றால் அதில் முக்கிய இடம் பிடித்தவர் மோகன் . கால்ஷீட் கொடுத்து விடுவார். கொடுத்ததைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கமாட்டார். விட்டுக் கொடுக்கும் குணத்தை இயல்பாகக் கொண்டவர். மார்க்கெட் வேல்யூ உள்ளவர். எப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்கும் பொருந்தக் கூடியவர். மினிமம் பட்ஜெட்டில் படமெடுக்கலாம். மேக்ஸிமம் வசூலை அள்ளிவிடலாம். முதலுக்கு மோசம் இருக்காது. மோகன் படமென்றால் மினிமம் கியாரண்டி நிச்சயம் என்று தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் கொண்டாடுகிறார்கள். இதன் காரணமாகவே வெள்ளி விழாக்களை சில ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தார் என்று கூட சொல்லலாம். நடித்த படங்களில் தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேல் மிகப்பெரிய வெற்றிப்படங்கள்தான். அப்படி வெள்ளிவிழா நாயகனாக திகழ்ந்த மோகனின் 62வது பிறந்தநாள் இன்று (10 மே).

மோகன், கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவரை திரையில் முதலில் அறிமுகம் செஞ்சவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1977ஆம் ஆண்டு வெளியான கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார் மோகன்.

அப்பாலே தமிழில் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய, மோகன் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார்.

அதைத் தொடர்ந்து வெளியான ‘கிளிஞ்சல்கள்’ 250 நாட்களுக்கு மேல் ஓடியது. வெற்றிக்காத்து பலமாக வீச பயணங்கள் ஓய்வதில்லை, உதய கீதம் ,கோபுரங்கள் சாய்வதில்லை, விதி ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றியடைந்தன. இவரது படத்தில் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. பட்டி தொட்டியெங்கும் ஹிட் என்பது இவர் காலத்தில் உருவானதே. அந்தக் காலத்தில், காதல் தோல்வியடைந்தவர்களுக்கு இவரது பாடல்களும், டி.ஆர் பட பாடல்களும் பெரும் வரமாக இருந்தன. மோகனின் நடிப்பையும், நிஜ வாழ்வில் அவர் நடத்தையையும் கண்டு பல நடிகைகளின் அம்மாக்கள் தங்கள் மகளை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார்களாம். தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் பெண்கள், தங்களுக்கு மோகன் போன்ற மாப்பிள்ளை வேண்டுமென்றும், ஆண்கள், மோகன் போன்ற தோற்றமும் அவரது உடை பாணியையும் பின்பற்றவும் முயன்று வந்தனர்.

இவரின் நடிப்பைக் கண்டு அந்தக் கால பெண்கள் இவருக்கு தீவிர ரசிகைகளாக இருந்தனர். இவர் தேர்ந்தெடுக்கும் கதையெல்லாம் காதல் மற்றும் குடும்பம் சார்ந்ததாகவே இருக்கும். 1986ஆம் ஆண்டு ஒன்பது படங்களில் மோகன் நடித்தார் அதில் இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒன்று மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘மௌன ராகம்’, இன்னொன்று, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான ‘மெல்லத்திறந்தது கதவு’ திரைப்படம். இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்தப் படத்துக்கு இளையராஜா, எம்.எஸ்.வி என்று இரு இசை ஜாம்பவான்களும் இசையமைத்தனர். (கட்டிங் கண்ணையா)

தனது படங்களிலெல்லாம் பாடகராகவே தோன்றிய மோகனுக்கு, படங்களில் வெளிப்பட்ட குரல் அவரது குரல் இல்லை. இவருக்கு அனைத்து படங்களுக்கும் நடிகர் விஜயின் மாமாவும் பாடகருமான எஸ்.என்.சுரேந்தர் குரல்கொடுத்துள்ளார்

‘மைக்’ மோகன் என்று இவருக்கு பெயர் வர காரணம், இவர் நடித்த படங்களில் மைக் வைத்துக்கொண்டு பாடல் காட்சிகளில் பாடுவார். பெரும்பாலும் பாடகராகத்தான் நடித்தார். அது ஒரு சென்டிமெண்ட்டாகக் கூட கருதப்பட்டது. இவர் நடித்த முக்கால்வாசிப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார். மோகன், பாலு மகேந்திரா தன்னை அறிமுகம் செய்ததால் அவரை தனது மானசீக குருவாக கருதினார். 1984ஆம் ஆண்டு, ஒரு நடிகருக்கு இவ்வளவு திரைப்படம் வருமா என்று ஆச்சரியம் அடையும் அளவிற்கு மோகனுக்கு 19 படங்கள் வெளியாகின. அதில் அவர் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்த நூறாவது நாளும் ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *