சினிமா செய்திகள்நடிகர்கள்

தல -ன்னா தலதான்

ரசிகர்களின் அளவிட முடியாத அன்பைப் பெற்றவர் அஜித். ஹீரோ என்றால் நல்லவனாக மட்டும் தான் இருக்கவேண்டுமா? நெகட்டிவ் ரோலில் ஒரு படத்தைப் பண்ணலாம் என மீண்டும் நினைத்தவர் ரொம்ப யோசித்து பண்ணிய ஐம்பதாவது படம்தான் ‘மங்காத்தா’.

90ஸ் கிட்ஸ் அஜித்தை இன்னும் அதிகமாகக் காதலிக்க, கொண்டாட இந்தப் படம் தான் காரணம் என்றால் மிகையல்ல.. இந்த படம் குறித்து நம்ம கட்டிங் கண்ணையாவிடம் பேசிக் கொண்டிருந்த போது “அஜித், தன் 42-வது படமான ‘பரமசிவன்’ நடித்துக்கொண்டிருக்கும்போதே தன் 50-வது படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்துவிட்டார். ‘வழக்கமா, 50-வது படம்னா ஹீரோ பூவுக்குள்ள இருந்து எழுந்து சிரிப்பார்; ஓப்பனிங் சீன்ல ஆட்டிக்குட்டியைக் காப்பாத்துவார். ஆனா, என் 50-வது படத்துல இந்த மாதிரி எதுவும் இருக்கக் கூடாது. குறிப்பா நான் நார்மலா, வழக்கமான ஹீரோவா இருக்க மாட்டேன்’ எனச் சொல்லிக்கொண்டிருப்பாராம். அதாவது, வழக்கமான ஹீரோவுக்கு நேரெதிர் ஹீரோவாக இருக்க வேண்டும் என முடிவுசெய்து, அதற்கு தகுந்த மாதிரியான ஸ்க்ரிப்டையும் தேடிக்கொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் வெங்கட் பிரபு இவரிடம் தன் அடுத்த பட ஸ்க்ரிப்ட்டைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ‘இது உங்க ரேஞ்ச் படம் இல்லைன்னா, நான் பசங்களை வெச்சு பண்றேன். சத்யராஜ் சார், விவேக் ஓபராய் இருவருக்கும் முக்கியமான கேரக்டர்கள்’னு சொல்லியிருக்கிறார். இது அப்படியே தான் தேடிக்கொண்டிருந்த 50-வது படத்துக்கான ஸ்க்ரிப்டாக இருப்பதைப் புரிந்துகொண்ட அஜித், ‘நீ எனக்கு ஸ்க்ரிப்ட்ல தனியா எதுவும் பண்ண தேவையில்லை. உன் கதையில் நான் இருப்பேன். அந்த கேரக்டராவே நான் இருப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படித்தான் அஜித் `மங்காத்தா’வுக்குள் வந்தார். அதாவது சத்யராஜ், விவேக் ஓபராய்க்குப் பதிவலாக அஜித், அர்ஜுன்.

ராவாகக் குடித்துவிட்டு நடக்கும் மாஸ் ஹீரோ கேரக்டர்களுக்கு மத்தியில், இதில் மறுநாள் காலையில் ‘ஐயோ தலைவலிக்குதே!’ என்பார். ராய் லட்சுமிடன் படுக்கையில் இருப்பார். த்ரிஷாவின் அப்பாவை காரிலிருந்து தள்ளிவிடுவார். ‘மணி… மணி… மணி!’ எனப் பணத்துக்காக அலைவார். அவர் சொன்னதுபோலவே வழக்கமான ஹீரோவுக்கான நேர்ரெதிர் கேரக்டர். வெங்கட் பிரபுவின் ஸ்க்ரிப்டில் இவர் இருந்தாலும் அது தியேட்டரில் மிகப்பெரிதாகத் தெரிந்ததற்கு ஒரே காரணம் அஜித்.

அதேபோல அர்ஜுனுக்கு படத்தில் அவ்வளவு ஸ்பேஸ் இருந்த ஸ்க்ரிப்டில் எந்தச் சிறிய மாற்றமும் சொல்லவில்லை. முதல் நாள் படப்பிடிப்பில் அஜித்துக்கான காட்சிகள் எதுவும் இல்லை. அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் படம்பிடித்தனர். ஆனால், அர்ஜுனை இலகுவாக்க முன்னதாகவே படப்பிடிப்புத் தளத்துக்குப் போய் அர்ஜுனை வரவேற்றது முதல் அன்று படப்பிடிப்பு முடியும் வரை அர்ஜுனுடன் இருந்துவிட்டு வந்தார்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்கான ரெஃபரன்ஸ் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனிதான். அவரின் முந்தைய படங்களில்கூட நரைமுடியுடன்தான் நடித்திருப்பார். அப்போதே அவரிடம் டை அடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். ‘நேற்று வரை வெள்ளை முடியா இருந்துட்டு, திடீர்னு கறுப்பு முடியுடன் போய் நிற்க ஒரு மாதிரியா இருக்குது’ எனத் தவிர்ப்பாராம். ‘மங்காத்தா’ அவரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைத் தந்த படம்.” அப்படீன்னார் .

அதே சமயம் சரோஜா, கோவா போன்ற கதையில் சிரத்தை இல்லாத படங்களை எடுத்துக் கொண்டிருந்த வெங்கட்பிரபு அஜித்தை இயக்குகிறார் என்றதும், பாராட்டியவர்களை விட அஜித்துக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என கவலைப்பட்டவர்களே அதிகம். படம் அறிவிக்கப்பட்டது முதல், ரிலீஸ் தேதி வரை என்ன நடக்குமோ என்ற படபடப்பை சுமந்தே காலம் தள்ளிக்கொண்டிருந்தனர் அஜித் ரசிகர்கள். இறுதியில், தமிழ் சினிமா அதுவரை கண்டிராத மாஸ் வில்லனையும் ஹீரோவையும் ஒரே முகத்தில், தல அஜித்தின் உருவத்தில் காட்டியிருந்தார் வெங்கட்பிரபு. தல போட்டோவை காமிச்சாலே நாங்கள் பொங்கல் வச்சு கொண்டாடுவோம் என சொல்லும் ரசிகர்களுக்கு தல தீபாவளியே கொண்டாடும்படி படம் அமைந்தது.

இந்த படம் வந்து ALMOST 10 வருஷம் ஆச்சு. ஆனால் இந்த படத்தை பற்றி இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு இன்னிக்கு மங்காத்தா படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது, சொல்லிவைத்தார் போல் நேற்று சன் டிவியில் கில்லி படம் ஒளிபரப்பு ஆனது. ஊர் அடங்கில் இருக்கும் இந்த ஊரே அந்த படத்தை நேற்று உட்க்கார்ந்து புது படத்தை பார்ப்பது போல டிவி முன்னாடி உட்க்கார்ந்து கன் கொட்டாமல் பார்த்தது. அதே போல் Twitter ட்ரெண்டிங்கில் அடித்து நொறுக்கியது

அதேபோல் இன்று விஜய் ரசிகர்கள் மங்காத்தா ஒளிபரப்பு ஆகப்போகிறது என்று தெரிந்தவுடன் “எங்கே கில்லி ரெக்கார்ட் பண்ணி காட்டுங்கடா” என்று சவால் விட்டார்கள். தல ரசிகர்கள் சும்மாவே மாஸ் பண்ணுவாங்க, சவால்விட்ட சொல்லவா வேணும்…

தற்போது வரை கிட்டத்தட்ட மங்காத்தா ட்வீட்கள் வந்துகினே இருக்குது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *