திரை விமர்சனம்

சொட்ட சொட்ட நனையுது – திரை விமர்சனம்

காரைக்குடியைச் சேர்ந்த வசதி படைத்த ராஜாவிற்கு ஒரே பிரச்சனை, வழுக்கை. பணக்கார குடும்பம் என்று விரும்பும் பெண் வீட்டார் கூட மாப்பிள்ளையின் சொட்டைத்தலை பார்த்ததும் ரிவர்ஸ் அடித்து விடுகிறார்கள். இதனால் நாயகனின் திருமணம் கிட்டத்தட்ட கேள்விக்குறி நிலையில் இருக்க…
ஒரு கட்டத்தில் பெண் பார்க்கப் போகும் படலத்துக்கே முற்றுப்புள்ளி வைக்கிறான்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக வெளியூரிலிருந்து பாட்டி வீட்டுக்கு வரும் பிரியா, நாயகனின் வழுக்கை பற்றி கவலைப்படாமல் ராஜாவை மணக்க சம்மதிக்கிறாள்.

இது போதாதா? ராஜாவின் பெற்றோர் தடபுடலாக திருமண தேதி குறிக்க,
விடிந்தால் திருமணம். ஆனால் ராஜா முந்தின இரவு திருமணத்தை நிறுத்தி விடுகிறான். கல்யாணத்தை ராஜா ஏன் நிறுத்தினான்? அதன் பின் வேறு எந்த பெண்ணாவது அவனை மணமகனாக ஏற்றுக் கொண்டாளா என்பது கிளைமாக்ஸ். கோடீஸ்வர ராஜாவாக நிஷாந்த் ரூசோ அந்த மொட்டை கேரக்டரில் அச்சாக பொருந்திப் போகிறார். இளம் வயதில் வழுக்கைத் தலையோடு இருப்பவர்களின் வலி மிகுந்த வேதனையை நடிப்பில் கொண்டு வந்து விடுகிறார்.
அதற்கேற்ப வழுக்கைத் தலை மேக்கப் அவருக்கு கச்சிதமாக பொருந்தி அந்த கேரக்டராவே அவரை முழு படத்திலும் உணர வைக்கிறது.

நாயகிகளாக நடித்திருக்கும் பிக் பாஸ் வர்ஷினி மற்றும் ஷாலினி இருவரில் வர்ஷினிக்கு அதிக வேலை இல்லை. ஆனாலும் வந்த காட்சிகளில் ஒரு நிறைவை தந்து விட்டு போகிறார். இன்னொரு நாயகி ஷாலினிக்கு தன்னை எப்போதும் ஃப்ரெஷ்ஷாவே வைத்துக் கொள்ளும் கேரக்டர். அவரும் அதற்காக முடிந்தவரை ஆடுகிறார் பாடுகிறார்
ஓ டுகிறார்.

காமெடிக்கென்று ரோபோ சங்கர், புகழ், கேபிஒய் ராஜா, கேபிஒய் யோகி, கேபிஒய் வினோத் இருக்கிறார்கள். சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கச்சிதம். கதைக்களமே நாயகனின் தலை தான் என்பதால், ஒளிப்பதிவாளர் ரயீஷின் கேமரா பெரும்பாலும் நாயகனின் வழுக்கைத் தலையை சுற்றியே வருகிறது.

எழுதி இயக்கி இருக்கிறார் நவீத் எஸ்.ஃபரீத். வழுக்கைத் தலையால் பாதிக்கப்படும் மனிதர்களின் வலி மிகுந்த வாழ்க்கையை இயல்பு தன்மை மாறாமல் சொல்லி இருக்கிறார். வழுக்கை நாயகனின் திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டும் என நண்பர்கள் துடிக்க, அவருக்கு வலுவான காரணம் சொல்லி இருக்கலாம். என்றாலும் குறைபாடு என்பது பார்ப்பவர்களின் மனதை பொறுத்தது என்ற அந்த கிளைமாக்ஸ், கொளுத்தும் கோடை வெயிலில் வந்த திடீர் மழையாக மனதை குளிர்வித்து விடுகிறது.