திரை விமர்சனம்

கடுக்கா – திரை விமர்சனம்

கிராமங்களில் ‘கடுக்கா’ கொடுத்து விட்டான் என்ற சொலவடை பிரபலம். சிலர் நம்ப வைத்து ஏமாற்றுவார்கள். அப்போது ஏமாந்தவர் விரக்தியாக, :அட கடுக்கா குடுத்துட்டு போய்ட்டான்பா’ என்பார்கள். நாட்டு மருந்து கடைகளில் கடுக்காய் என்ற பெயரில் உடலுக்கு நல்லது செய்கிற ஒரு மருந்தும் உண்டு.

இந்த படம் ஏமாற்றுகிற கடுக்காயா? அல்லது உடலுக்கு நலம் சேர்க்கும் நாட்டு மருந்துகளில் ஒன்றா? வாருங்கள் பார்க்கலாம்.

படத்தின் நாயகன் வேலை வெட்டி எதற்கும் போகாமல் ஊர் சுற்றி திரிபவன். ஊரின் பிரதான பஸ் ஸ்டாப்பில் நின்றபடி பஸ்ஸில் பயணிக்கிற இளம் பெண்களை சைட் அடிக்கும் வேலையை செவ்வனே செய்வான். மீதமிருக்கும் நேரங்களில் கிராமச் சாவடிகளில் ஊர் பெரிசுகளோடு தாயக்கட்டை ஆடுவது உண்டு. இதனால் சொந்த ஊரிலேயே உதவாக்கரை என்று பெயர் எடுத்த நமது நாயகன் அது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ‘தானுண்டு தன் சைட் உண்டு’ என்று வலம் வருகிறான்.
இந்த நேரத்தில் அவன் வீட்டு அருகிலேயே ஒரு அம்மாவும் பெண்ணும் குடி வருகிறார்கள். பெண் அழகு. அதோடு கல்லூரி மாணவி.

இது போதாதா நம்ம ஆளுக்கு… பஸ் ஸ்டாப் ட்ரிப்பை கட் செய்துவிட்டு வீட்டிலே கதியாக கிடக்கிறான். அந்தப் பெண் கண்ணில் தட்டுப்படும் நேரங்களில் எல்லாம் காதல் பார்வையை வீசுகிறான். ஒரு கட்டத்தில் அந்த காதல் பார்வைக்கு எதிர்முனையில் இருந்து ஓகே சிக்னல் கிடைக்க, உலகையே ஜெயித்த சந்தோஷம் நம்மாளுக்கு. இனி என்ன தொடர்ந்து காதல் டூயட். அப்புறம் ஒரு நல்ல நாளில் திருமணம் என்ற கனவுடன் உலா வரும் நாயகனுக்கு சம்மட்டி அடியாய் காதில் விழுகிறது அந்த செய்தி.

நம்ம நாயகனின் ஓவிய நண்பனையும் அந்தப் பெண் காதலிக்கிறாள் என்ற செய்தி கேட்டால் தலையில் இடி இறங்குமா இல்லையா… இருந்தாலும் எதற்கும் ஒரு
நப்பாசையுடன் அப்படியெல்லாம் இருக்காது என்ற நம்பிக்கையுடன் நண்பனிடம் இது பற்றி கேட்க, அவனும் விபரீதம் புரியாமல், ‘ஆமாம். நாங்கள் உயிருக்கு உயிரான காதலர்கள்’ என்கிறான்.
இதனால் உயிருக்கு உயிரான நண்பர்கள் எதிரிகளாகிறார்கள். கட்டிப் புரண்டு சண்டை போடும் அளவுக்கு அந்த காதல் அவர்களை பாடாய்படுத்துகிறது.
ஒரு கட்டத்தில் நண்பர்கள் இருவரும் தங்கள் ஒரே காதலியிடம் நியாயம் கேட்க…
காதலியோ இருவருக்கும் அவர்கள் நம்பும் பதிலை சொல்லி கன்வின்ஸ் செய்கிறாள்.
இதற்கிடையே அவசர குடுக்கையாய் ஓவிய நண்பன் தன்னிடம் நட்பு பாராட்டும் நாயகியின் தந்தையிடம் தனது காதல் பற்றி சொல்ல…
வந்தது வினை. ‘ஏண்டா…என்ர நண்பன் பையன் என்று உன்கிட்ட அன்பு காட்டினா உனக்கு என்ர பொண்ணு கேக்குதாக்கும்…’
என்று வெகுண்டெ ழுந்தவர், உடனடியாக மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண தேதியும் குறிக்கிறார்.
ஆனால் திருமணத்திற்கு முதல் நாள் மணமகள் மாயமாகிறாள்.
பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் தர, உள்ளூர் காதலர்கள் இருவரையும் கொக்கி போட்டு ஸ்டேஷனுக்கு தூக்கி வந்து விசாரிக்கிறது போலீஸ். அடி உதை வாங்கும் நண்பர்கள் இருவருமே ஒருமித்த குரலில், ‘எப்ப அந்த பொண்ணுக்கு திருமணம் நிச்சயமாச்சோ அப்போதே நாங்கள் அவளை மறந்து விட்டோம்’ என்று கதற…
மணப்பெண் என்னவானாள்? கடத்தப்பட்டாளா? அல்லது அவளே தலைமறைவானாளா? என்பது கதைக்களம்.

சீரியஸான இந்த கதையை அதுவும் கொங்கு தமிழில் சிரிக்க சிரிக்க
தந்திருக்கிறார்கள். நாயகனாக நடித்திருக்கும் விஜய் கெளரிஷ் அவரது நண்பராக நடித்திருக்கும் ஆதேஷ், நாயகியாக நடித்திருக்கும் ஸ்மேஹா நடிப்புக்கு புதுமுகங்கள். என்றாலும், அவர்கள் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.அந்த மூன்று பிரதான பாத்திரங்களே படத்தின் கதையை இறுதிவரை சுமந்து செல்கின்றன, அதுவும் போரடிக்காமல்.

சைட் அடிப்பதை 24 மணி நேர வேலையாகப் பார்க்கும் விஜய் கெளரிஷ், அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு,ஊர் சுற்றுவது , தாயம் விளையாடுவது என இயல்பாக அந்த கேரக்டருக்குள் பொருந்திப் போகிறார். காதலுக்காக எவ்வளவு அவமானங்களைச் சந்தித்தாலும் துடைத்து விட்டுச் செல்லும் இக்காலத்து இளைஞர் பாத்திரமாக நெஞ்சில் நிற்கிறார். அவரது காதல் பங்குதாரர் ஆதேஷ் நடிப்பிலும் பழுதில்லை.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்மேஹா, பக்கத்து வீட்டுப் பெண் போல் அத்தனை பாந்தம். இந்த காலத்திய படிக்கும் பெண்களின் மனக் குமுறல்களை தனது பாத்திரத்தின் வழியே நமக்குள் கடத்தி விடுகிறார்.

நாயகியின் அப்பாவாக மஞ்சுநாதன். கோவைத் தமிழை நெஞ்சுக்குள் நெருக்கமாக்கி விடுகிறார். அம்மாக்களாக வருகிற சுதா,மணிமேகலை பொருத்தமான பாத்திரத் தேர்வில் நடிப்பில் தெறிக்க விடுகிறார்கள்.

டெவின் டி. கோஸ்டாவின் இசையில் பாடல்கள் ரசனைக் களஞ்சியம்.
சதீஷ்குமார் துரைக்கண்ணுவின் கேமரா கதைக் களத்துக்குள் இயல்பாக புகுந்து விளையாடுகிறது. எஸ் எஸ் முருகராசு எழுதி இயக்கி இருக்கிறார். இன்றைக்கு படிக்கிற பெண் பிள்ளைங்க ஒவ்வொருவரும் எதிர்கொண்டு வரும் பிரச்சனையை முடிந்தவரை நகைச்சுவை பாணியில் சொல்லி காட்சிகளோடு நம்மை பிணைத்துக் கொள்கிறார். அந்த வகையில் இந்த கடுக்காயை அரும்பெரும் மருந்து பட்டியலில் தான் சேர்க்க வேண்டும்.

இது கல்விச் சோலையில் பூத்த காரமான கடுக்கா.