திரை விமர்சனம்

வீர வணக்கம் -திரை விமர்சனம்

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி யாளருமான பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கை வரலாற்றை நெஞ்சம் நெக்குருக தந்திருக்கிறார்கள்.

தமிழக கிராமம் ஒன்றின் பெரிய மனிதர் பரத், கம்யூனிசவாதியாக இருக்கிறார். ஊர் மக்களுக்கு சாதி மத பேதம் பார்க்காமல் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சனைகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்பதோடு, அம்மக்களை பிரச்சனைகளை எதிர்த்து போராட வைப்பதற்காக அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிச போராளிகளை சந்திக்க வைக்கிறார். அப்போது 97 வயதுள்ள பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறார்.
அவர் மூலம் கேரளாவில் கம்யூனிச புரட்சி உருவாகி, எப்படி விஸ்வரூபம் எடுத்தது என்பதை கவனம் ஈர்க்கும் விதத்தில் தந்திருப்பது சிறப்பு.

1940- ல் தொடங்கும் கதை 1946 வரை பயணிக்கிறது. இந்த காலகட்டங்களில் வெள்ளையனை வெளியேற்ற ஒரு தரப்பு போராடிக் கொண்டிருக்க, இந்திய கிராமங்களில் தனி அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த ஜமீன்கள் மற்றும் நில சுவான்தார் கள் மூலம் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட விவசாய தொழிலாளர்களின் சோகம் இன்னொரு பக்கம் நெஞ்சை பிசைகிறது.
புதிய மக்கள் புரட்சியை கம்யூனிசம் எப்படி உருவாக்கியது என்பதை யதார்த்தம் மீறாமல், அழுத்தமாக பதிவு செய்த விதம் நெஞ்சுக்குள் அழுத்தமாக பதிந்து போகிறது.

.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியை கிருஷ்ண பிள்ளையிடம் இருந்து பிரித்து எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு புரட்சிகரமான வசனங்களை உணர்வுப்பூர்வமாக பேசி கிருஷ்ண பிள்ளையை நடிப்பில் கண் முன்
நிறுத்துகிறார்.

பெரிய மீசை, கம்பீர தோற்றம்
பணக்கார கம்யூனிசவாதி
கேரக்டரில் பரத் நடிப்பில் நிமிர்ந்து நிற்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் மகளின் காதல் பற்றி அவர் பேசும் இடத்தில் ஆணவக்கொலைகளுக்கு ஆணி அடிக்கிறார்.
கம்யூனிச போராளியாக நடித்திருக்கும் ரித்தேஷ் காதலியை பிரிந்து போகிற இடத்தில் மனசை கலங்கடிக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, புரட்சிப் பாடகி பி.கே.மேதினி பொருத்தமான கேரக்டர்களில் மனதில் நிறைந்து நிற்கிறார்கள்.

கவியரசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களை நிறைக்கின்றன.
இசையமைப்பாளர்கள் எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரது இசையில் பாடல்கள் உயிரோட்டம்.
எழுதி இயக்கியிருக்கும் அனில் வி.நாகேந்திரன், பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வரலாற்றை உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுத்திருக்கிறார். காட்சிகளில் நெகிழ்வுத் தன்மை அதிகம். சில விஷயங்கள் போராடித்தான் பெறவேண்டும் என்கிற கம்யூனிஸ்ட் சித்தாந்தம் காட்சிப்பதிவில் அத்தனை அழகு.

மொத்தத்தில், ‘வீரவணக்கம்’ நெஞ்சின் ஈரம் வரைக்கும்.