நறுவீ – திரை விமர்சனம்
கல்வியின் அவசியம் குறித்த படம். இங்கே நறுமணமே கல்வி தான். மலைப்பிரதேசத்தில் மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் ஆசிரியர் அந்த அறியாமை மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு என்னவாகிறார் என்பது படத்தின் ஒருவரிக் கதை. அதை ஹாரர் த்ரில்லர் படமாகத் வந்திருக்கிறார்கள் .
குன்னூர் மலையிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்கு வின்சு ரேச்சல், Vj பப்பு, பாடினி குமார் முதலியோர் வருகிறார்கள். இவர்களுக்கு உதவ கேத்தரின் வருகிறார். இந்த குழு குன்னூர் மலையை தொட்டதும் அவர்களுக்கு நிறைய அமானுஷ்ய
அனுபவங்கள் கிட்டுகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதற்குப் பதிலாக ஒரு சோக கதையையும், ஒருவரது சேவை மனப்பான்மையும், அது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் கல்வியின்மையும் தொட்டுப் பயணிக்கிறது திரைக்கதை.
பன் பட்டர் ஜாம் படத்தில் நகைச்சுவையில் கலக்கியிருந்த VJ பப்பு, இதிலும் படத்தை கல கலப்பாக வைக்க உதவுகிறார். மருத்துவம் படித்து முடித்து விட்டு, தற்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் ஹரீஷ் அலாக், மலைவாழ் குழந்தையரின் கல்விக்கு உதவும் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். VJ பப்புவிற்கு ஜோடியாக நடித்துள்ள பாடினி குமாரும் மருத்துவர் என்பது குறிப்பிடத் தக்கது.
அமானுஷ்ய காரணத்தைக் கண்டுபிடிப்பவராக நாயகி வின்ஷு ரேச்சல் வருகிறார். படிப்பில் நாட்டம் கொண்ட மாதவி பாத்திரத்தில் வரும் சிறுமி தன் வெளி உலக ஆசைகளை ஆசிரியரிடம் அழுது கொண்டே பட்டியலிடும் இடத்தில் சிறப்பான நடிப்பு.
குன்னூரின் நிலப்பரப்பைத் தன் கேமராவிற்குள் அழகாக கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரன்.
மலைவாழ் மக்களின் அறியாமை மூலம் கல்வியின் அவசியத்தை உணர்த்த முயற்சி செய்துள்ள இயக்குநர் சுபாரக் முபாரக், அதை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்லி இருக்கிறார். இருப்பினும் அந்த அழகான கிளைமாக்ஸ் அழுத்தமாக அமைந்து இயக்குநருக்கு பெயர் வாங்கி தந்து விடுகிறது.
-,கல்விக்கு மகுடம்.
