திரை விமர்சனம்

ஹவுஸ் மேட்ஸ் – திரை விமர்சனம்

இது ஆவி கதை இல்லை. ஆவி கதை மாதிரியான அறிவியல் கதை.

தர்ஷன் – அர்ஷா பைஜூ காதல் தம்பதிகள்.அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்குகிறார்கள். அதே வீட்டில், காளி வெங்கட் அவரது மனைவி வினோதினி மற்றும் அவர்களது மகன் ஏற்கனவே வாழ்ந்து வருகிறார்கள். தன்னாலே திறக்கும் கதவு, தாமாக மூடும் பீரோ, சுவிட்ச் போடாமலே இயங்கும் டிவி என ஒரு ஆவி செய்யும் அத்தனை சேட்டைகளும் அந்த வீட்டில் நடந்தேற, நடு நடுங்கி போகிறார்கள் காதல் தம்பதிகள்.
அதே நேரம் ஒரு குடும்பம் வாழ்வது மற்றொரு குடும்பத்திற்கு தெரியாது. இதனால், இரு தரப்பினரும் இது அமானுஷ்ய வேலை என்று நினைக்க, பிறகு இது அமானுஷ்யம் இல்லை..அறிவியல், என்பதை புரிந்து கொள்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம், காளி வெங்கட் தம்பதிகள் 2012 ஆம் ஆண்டிலும் தர்ஷன் தம்பதிகள் 2022 ஆம் ஆண்டிலும் ஒரு வீட்டில் வாழ்ந்து வருவது இன்னொரு ஆச்சரியம். தொடர்ந்து அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் மூலம் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் இப்படி ஒரு விசித்திரமான அறிவியல் சிக்கலில் அவர்கள் சிக்கிக்கொள்வதற்கான காரணம் என்ன ?, அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா ? கேள்விகளுக்கு அறிவியல் அடிப்படையில் பதில் தருகிறது படம். அறிவியலில் நம்ப முடியாத பல விஷ யங்களுக்கு விஞ்ஞானிகள் விடை தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஒரு தேடல் தான் இந்த படத்தின் கதைக்கரு.

காதல் தம்பதிகளாக தர்ஷன்- அர்ஷா பைஜூ நடிக்க, காளி வெங்கட்- வினோதினி இன்னொரு தம்பதிகள். இரு ஜோடிகளுமே நடிப்பில் முழுமையாக தங்கள் கேரக்டர்களை உள்வாங்கி இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பின்னணி இசை இந்த அறிவியல் கதைக்குள் நம்பகத்தன்மையோடு பயணிக்கிறது.
ஒரே வீடு, இரண்டு வெவ்வேறு கோணங்கள் என்று ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷின் கேமரா இந்த கதைக்களத்தில் பெரும் பங்காற்றி இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் டி.ராஜவேல். நம்ப முடியாத விஷயத்தை கதைக்கருவாக எடுத்துக் கொண்டாலும், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகளை அறிவியல் அடிப்படையில் அமைத்து, ரசிகனை திறந்த வாய் மூடாமல் பார்க்க வைத்து விடுகிறார். இங்கே ஒரு நடுத்தர வயது காளி வெங்கட் குடும்பம் இருக்க, முதிர் வயது காளி வெங்கட் குடும்பம் இன்னொரு இடத்தில் கண்டு பிடிக்கப்படுவது கதையின் திருப்புமுனைக்கான ட்விஸ்ட் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

கிளைமாக்ஸில் சொல்லப்படும் விஷயங்கள் ஏற்படுத்தும் குழப்பத்தை வசனங்கள் மூலம் சரிக்கட்டி பாதி கிணறு தாண்டி இருக்கிறார் இயக்குனர்.
ஹாலிவுட்டில் இம் மாதிரி படங்கள் வரத் தொடங்கிவிட்டன. இங்கே இதுதான் முதல் படம். அந்த விதத்தில் ராஜவேல் எடுத்திருப்பது பரீட்சார்த்த முயற்சி.